அண்ணா ஏந்திய அறிவுச் சுடர் – பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

பேரறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரையின் 113 ஆவது பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட அவருடைய பிறந்தநாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரை…..

அறிஞர் அண்ணாவுக்கு எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. ஒரு கட்சியை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்தியவர்.நாடாளுமன்றத்தில் தனது அறிவார்ந்த உரைகளால் இந்திய அளவில் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தவர். நாடகத்தை, திரைப்படத்தைத் தனது அரசியல் பரப்புரைக்கான கருவிகளாக்கியவர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் களம் கண்டவர்; இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட ஒருவர் ஆட்சியமைத்தால் அவர் செய்யவேண்டியவை எவை என்பதற்கான முன்னுதாரணங்களை உருவாக்கியவர்;

ஆழமான கருத்துகளை எளிமையான ஈர்ப்புமிக்க தமிழில் எழுதிக் குவித்த எழுத்தாளர்,எதிராளிகளையும் ஏற்கச்செய்யும் ஆற்றல் மிக்க பேச்சாளர் – இப்படி அவரது பரிமாணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
ஒரு ஆய்வுரையைக் காட்டிலும் ஆழமாக ஒரு மேடைப்பேச்சு அமைய முடியுமா? என்ற வியப்பு அண்ணாவின் உரையைப் படித்தால் எவருக்கும் எழவே செய்யும்.

1943 ஆம் ஆண்டு – சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் தீயிட்டு எரிக்க வேண்டும் என்ற போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். களப் போராட்டமாக மட்டுமின்றி கருத்து போராட்டமாகவும் அது நடைபெற்றது 1943 பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் இது தொடர்பாக அறிஞர் அண்ணா அவர்களும் தமிழறிஞர் ஆர் பி சேதுப்பிள்ளை அவர்களும் பங்கேற்ற ஒரு விவாதம் நடைபெற்றது.

கலையை அழிக்கிறார்கள் என்று சுயமரியாதை இயக்கத்தவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது அதற்குப் பதில் சொல்லும் விதமாக, ”கலை, இலக்கியம், கற்பனை நூல் இவற்றின் மீதெல்லாமா எங்களுக்கு விரோதம் ? இல்லை!. தொல்காப்பியத்தை தொட்டோம் இல்லை, நற்றிணையை, நல்ல குறுந்தொகையை, கற்றறிந்தார் ஏற்றும் கலியை அழிக்கப் புறப்பட்டோமில்லை. ஆரியத்தை அழகு தமிழை அழிக்கும் நூல்களையே கண்டிக்கின்றோம்” என்று அதற்கு விளக்கம் சொன்னார் அண்ணா. ”நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திறனை அல்ல, அதன் தன்மையை, விளைவை என்பதை அறிஞர்கள் தெரிய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்ட அண்ணா, வால்மீகி கூறியபடியே ராமாயணத்தைக் கம்பன் எழுதி இருந்தால் அதை மக்கள் இந்த அளவுக்குக் கொண்டாட மாட்டார்கள். கவித் திறமையினால் ஆரிய ராமனை குற்றம் குறையற்ற சற்புத்திரனாக்கிக்காட்டி வழிபாட்டுக்குரிய தெய்வம் ஆக்கிவிட்டார் ”என்று குற்றம்சாட்டினார். காதலுக்கும் கற்புக்கும் ராம காதையில் இருக்கும் இன்ப நுணுக்கப் பொருள்களை விட மிகச் சிறப்பான பொருட்கள் நம் அக இலக்கியங்களில் உண்டு எனவே கம்பராமாயணம் அழியின் காதலுக்கும் கற்புக்கும் கவிதையிராதே என்று பண்டிதர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.

”குணாளன், திறமைசாலியான ராவணன், ஒரு ஆரிய மங்கையைக் கண்டு காமுற்று கருத்தழிந்து அறம் கெட்டு அழிந்தான் என்று முடிப்பது திராவிட இனம் என்ற பெருமைக்கே இழுக்கு தேடுவதாகும்” என்று அண்ணா வாதிட்டார். இதற்கு மறுப்பு கூறிய ரா.பி.சேதுப்பிள்ளை, ராவணன் திராவிடனல்ல.அவனும் ஒரு ஆரியனே என்று பல ஆதாரங்களை சுட்டிக்காட்டினார். அவன் எவ்வளவோ சிறப்புகள் கொண்டவனாக இருந்தாலும் இரக்கமற்ற நெஞ்சினன் ஆக இருந்ததால் தான் அழிய நேர்ந்தது என்றார்.

இந்த விவாதம் நடைபெற்று சுமார் ஒரு மாதம் கழித்து 1943 மார்ச் 14ஆம் தேதி சேலம் செவ்வாய்பேட்டையில் அறிஞர் அண்ணாவுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கும் இடையே இதே தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

”தனியான கலையுடன், தனியான வாழ்வும், தனி அரசும் பெற்று வாழ்ந்த தமிழர் பின்னர் தாக்கிவிட்டு தன்மானம் இழந்து தன்னரசு இழந்ததற்குக் காரணம் கம்பராமாயணம் பெரியபுராணம் போன்ற ஆரிய கற்பனைகளை உள்ளடக்கிய கலப்புக் கலையைத் தம் தலைமேல் கொண்டதனால் தான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் என்று பல்வேறு அறிஞர்கள் கூறியிருப்பதையும் ஆதாரங்கள் காட்டுவதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே தமிழரின் தனிச்சிறப்புகள் கெடுத்த நூல்கள் ஒழிக்கப்பட்டு தமிழன் தனி இனம், தனிப்பண்பு படைத்தவன், தனிக் கலையுடையவன்”என்று குறிப்பிட்ட அண்ணா, தமிழன் இழந்துவிட்ட தன்மானத்தையும் தன்னரசையும் பெற இதுவே தக்க வழி” என்று தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
இந்த உரையில், ’தமிழர்கள் இந்துக்களல்ல’ என்ற வாதத்தை வலுவாக அண்ணா முன்வைத்திருக்கிறார். தமிழ்த் தேசியம் பேசும் சிலர் ஆரியத்தின் பரப்புரையாளர்களாகிவிட்ட இன்றைய நிலையில் அண்ணாவின் இந்த வாதம் முதன்மை பெறுகிறது.

”வைணவம் சைவம் என்னும் இரண்டும் இந்து மார்க்கத்தின் கிளைகள். தமிழர் இந்துக்கள் அல்லர். தமிழருக்குத் தனி நெறி உண்டென்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக்கொண்டு தமிழர் தம்மை இந்துக்கள் என்று கருதி வருகின்றனர்.தம் நெறியை விட்டு ஆரிய நெறியாகிய இந்து மார்க்கத்தைக் கொண்டு தம்மை இந்துக்கள் என்று கருதிக் கொள்வதால் தமிழர்கள் தாங்கள் தனி இனம் என்பதை மறந்து, இந்துக்களில் ஒரு பகுதி என்று எண்ணி தன்மானத்தையும் தன்னரசையும் இழந்தனர். இதற்குக் கம்பராமாயணமும் பெரியபுராணமும் பயன்படுகின்றன. எனவே அவைகளை கொளுத்திக்காட்டி ’தமிழரே! இவை இந்துக்களுக்கு மார்க்க நூல்கள் தமிழருக்கு அல்ல. தமிழருக்குத் தனி நெறியும் கலையும் உண்டு’ என இன எழுச்சியை உண்டாக்கவேண்டும் என அண்ணா தமது நோக்கத்தை விளக்குகிறார்.

“தமிழர்களுக்கு ஆரிய மார்க்கமாகிய இந்து மதத்தின் இரு நூல்களான கம்பராமாயணமும் பெரியபுராணமும் கூடாது என்று கூறுகிறோம். அவைகளில் ஆபாசங்களும் ஆரிய கற்பனைகளும் உள்ளன. ஆரிய மார்க்கத்தைப் பரப்ப உதவுகின்றன. என்று பேசிய அண்ணா, ’ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரியத்தை வளர்க்கும் மேற்படி நூல்களைக் கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம்’ எனத் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

”பெரியபுராணம் படித்தவர்கள் சாதிகள் பல இருப்பினும் இருக்கட்டும், குலத்தொழில் இருப்பின் அதைச் செய்வோம். ஆனால் பக்தி செய்தால் எந்த குலமாக இருப்பினும் மேன்மை அடையலாம் என்று நினைக்க முடியுமே தவிர சாதி பேதம் ஒழிய வேண்டும் வர்ணாசிரமம் போக வேண்டும் என்ற பாடத்தை உணர்ச்சியை பெரியபுராணத்தைப் படித்துப் பெறமுடியாது. இன்று நமக்கு வேண்டியது சமத்துவ உணர்ச்சி. ஆரியத்தால் கெடும் நிலையை மாற்றும் துணிவு. இதற்கு பெரியபுராணம் பயன்படாததுடன் சாதி இழிவுகளையும் ஆரிய முறைகளையும் பக்தியின் பெயரால் நிலைத்திருக்கச் செய்கிறது’ என்று விளக்கினார்.

அண்ணாவின் வாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய நாவலர் சோமசுந்தர பாரதியார் தாம் பின்பற்றும் சைவ நெறி என்பது ஆரியத்துக்கு எதிரானது என்பதை விளக்கிக் கூறினார். தன்னுடைய பதினாலாவது வயதில் கல்யாணம் நடந்தபோது நடந்த சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்காட்டினார்: ”எட்டையபுரம் சமஸ்தானத்தின் ஒரு கிராமத்திலே நாகரீக வளர்ச்சி பெறவும் முடியாது ஊரிலே எனக்கு கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன்றதல்ல என்னுடைய சிவநெறி. இன்று சைவ பண்டிதர் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண்மையே எனக்கு சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன்” என்று குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

”கம்பராமாயணத்தில் உள்ள குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவு வளரச் செய்ய வேண்டும். வாலியை இராமன் கொன்றது.சம்புகனை வதைத்தது, தனக்கு உரிமையில்லாத அரசை அடைந்தது இவை குற்றங்கள். மக்களிடம் இவற்றை எடுத்துக் கூறவேண்டும் எதிரியின் கருத்தை மெல்ல மெல்ல மக்களுக்குக் கூறி மக்கள் எதிரியின் கருத்தை ஆபாசமானது என்று கருதி எள்ளி நகையாடும் விதமான நிதானமான வேலையே மிக்க பயனளிக்கும்” என்று சோமசுந்தர பாரதியார் ஆலோசனை கூறினார். அதுமட்டுமின்றி, “கம்பராமாயணத்தை தமிழர்கள் தான் கொண்டாடுகிறார்கள் ஆரியர்கள் வால்மீகி ராமாயணத்தைத்தான் விசேஷமானதாகக் கருதுகிறார்கள். எனவே கம்பராமாயணத்தைக் கொளுத்துவது தமிழர்களுக்குக் கோபம் ஊட்டி தமிழர்களுக்குள் பிளவை உண்டாக்கும்” என்று குறிப்பிட்டு எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அண்ணா, ’நாவலர் சோமசுந்தர பாரதியார் 40 ஆண்டுகளாகத் தமிழருக்கு அறிவு புகட்டும் வேலையில் ஈடுபட்டும், ஆரியத்தை எதிர்த்தும் அந்த முயற்சியெல்லாம் வீணாயிற்று என்று கூறுகிறார் .40 ஆண்டுகள் மெள்ள மெள்ள மக்களிடம் விஷயத்தை விளக்கும் முறையைக் கையாண்டு பாரதியார் தோற்றதாகக் கூறிவிட்டு அதே முறையை நாம் கையாளவேண்டும் என்று புத்திமதி கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’ என்று கேட்டார்.

ராமாயணத்தைப்பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியுள்ள கருத்துகளோடு அண்ணாவின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுக்கிடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமையை நாம் புரிந்துகொள்ளலாம். வால்மீகி படைத்துக்காட்டிய ராமனது பாத்திரத்தை தனி மனிதன் என்ற நிலையில் வைத்து ஆராய்ந்த அம்பேத்கர் அவன் மறைந்துநின்று வாலியைக் கொன்றதையும், சீதையை நடத்திய முறையையும் கடுமையாக விமர்சிக்கிறார். அவனை மன்னன் என்ற நிலையில் வால்மீகி எப்படி சித்திரித்துள்ளார் என்பதை அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார்: “ இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான்” என்று சுட்டிக்காட்டியுள்ள அம்பேத்கர், “ நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை.” என்கிறார்.

ராமாயணத்தைப் பொறுத்தவரை அண்ணல் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தைப்பற்றி சொல்லியிருக்கும் கருத்துகளும் , அண்ணா கம்ப ராமாயணத்தை விமர்சித்து சொன்ன கருத்துகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன. ராமாயணத்தை விமர்சித்ததிலும், அம்பேத்கரின் மதமாற்ற முடிவை ஆதரித்ததிலும் அண்ணாவின் அரசியல் தெளிவு வியக்க வைக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்தைத் துறந்து பௌத்த மதத்தை ஏற்றபோது அதை ஆதரித்து திராவிடநாடு இதழில் அண்ணா கட்டுரை ஒன்றை எழுதினார் ( 21.10.1956) அதில்:
“ டாக்டர் அம்பேத்கரின் மத மாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறிவிடாது.
மூன்று இலட்சம் மக்களை உடனழைத்துக்கொண்டு டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளத்தான் போகின்றனர்.” என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட அண்ணா , “ தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.

டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.” என்று அம்பேத்கரின் மதமாற்றத்துக்கு ஆதரவாக அண்ணா நற்சான்று அளித்தார்.

அறிஞர் அண்ணா பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். அவற்றுள் எந்த அண்ணாவை நாம் இப்போது முன்னிறுத்துவது? 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததைப்போல சனாதனம் தமிழ் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றையைச் சூழலில் நாம் முன்னிறுத்தவேண்டியது சனாதனத்தை சுட்டெரிப்பதற்காக அறிவுச் சுடர் ஏந்திய அண்ணாவைத்தான்.

Leave a Response