ரஜினி அரசியல் கட்சி தொடக்கம் – ரவிக்குமார் கட்டுரை

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரை…

எதிர்நாயகனின் வருகை – ரவிக்குமார்

வழமையான நாயகனின் பண்புகளுக்கு மாறாக அதற்கு எதிரான குணங்களைக் கொண்டு ஒரு படைப்பின் நாயகனாக முன்வைக்கப்படுகின்ற பாத்திரத்தை எதிர் நாயகன் ( anti hero) என்று குறிப்பிடுவார்கள். இலக்கியத்திலும், திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு பல வெற்றிகளை அது கொடுத்திருக்கிறது.

காஃப்காவின் விசாரணை, ஆல்பெர் காம்யுவின் அந்நியன், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் முதலான நாவல்கள் இலக்கியத்தில் கவனத்தை ஈர்த்த எதிர்நாயகப் பாத்திரங்களைக் கொண்டவை எனக் கூறலாம்.

அதுபோலவே திரைப்படங்களிலும் நன்மை செய்வது அல்லது நன்மைக்காகப் பாடுபடுவது என்ற பண்புகளின்றி வில்லன்களின் பண்புகளோடு எதிர் நாயகர்களை முதன்மைப் பாத்திரமாகக்கொண்டு பல திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன.

கேப்டன் ரஞ்சன் ( சந்திரலேகா) , எம்ஜிஆர் ( நீரும் நெருப்பும்) முதலானோரை முன்வைத்து சிறு சிறு அளவில் அது தமிழ் சினிமாவில் முயற்சித்துப் பார்க்கப்பட்டது என்றாலும் எதிர் நாயகன் பாத்திரத்தை வெற்றிக்கானதாக மாற்றிக்காட்டியவர் ரஜினிகாந்த் என்று சொல்லலாம்.

கே.பாலச்சந்தரால் அவர் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அபூர்வராகங்கள், அடுத்ததாக மூன்று முடிச்சு ஆகிய திரைப்படங்களிலும், 16 வயதினிலே, காயத்ரி ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்த அவர் தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, முள்ளும் மலரும் முதலான படங்களில் எதிர் நாயகன் பாத்திரங்களை ஏற்றார். அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பே அவரைத் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக உயர்த்தியது.

கதாநாயகனாகப் பல படங்களில் நடித்தார் என்றாலும் பாட்சா, சந்திரமுகி ஆகியவற்றில் அவர் ஏற்றிருந்த எதிர் நாயகன் பாத்திரங்களே அவற்றை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக மாற்றின.

இலக்கியத்திலும் திரைப்படங்களிலும் எதிர் நாயகர்களை மக்கள் ரசித்தாலும் அரசியலில் அத்தகையவர்களை மக்கள் ஆதரித்ததில்லை. ஆனால், திரைப்படத்தில் பெற்ற வெற்றியை மனதில்கொண்டு இப்போது அவர் அரசியலிலும் அதை முயற்சித்து பார்க்க விரும்புகிறார். 2021 ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவர் தமிழக அரசியல் களத்தில் இரண்டு பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒன்று இமயமலைக்கும், ராமகிருஷ்ணா மடத்துக்கும் போன ஆன்மிக பாத்திரம், மற்றொன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை ஆதரித்த வில்லன் பாத்திரம். இந்தக் கலவை அரசியலில் ஒரு ஹீரோவாக அல்ல, ‘ஆன்ட்டி ஹீரோ’வாகவே அவரை அடையாளப்படுத்துகிறது.

‘எதிர்நாயகன்’ ரஜினிகாந்த்துடன் ஆரம்பகாலப் படங்களில் இணைந்து நடித்த கமல்ஹாசன் அரசியலிலும் அவரோடு சேர்ந்து தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதிமுக உடைந்து ஒரு பிரிவு அவரோடு கூட்டணி சேர்ந்தாலும் வியப்பில்லை.

‘எதிர் நாயகன்’ ரஜினிகாந்துக்கு தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறார்களா அல்லது இதே கலவையில் அவர் நடித்த பாபா படத்துக்குக் கொடுத்ததைப்போல மிகப்பெரிய தோல்வியைப் பரிசளிக்கப் போகிறார்களா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Leave a Response