கர்நாடக தேர்தல் தேதி பாஜகவின் ஐ டி பிரிவுக்கு முன்பே தெரிந்தது எப்படி ?

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்ட்டது. தேர்தலுக்கான, வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 24ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற 27ம் தேதி கடைசி நாளாகும். மே 12ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 15ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இன்று காலை 11:00 மணியளவில் அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பாகவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தேர்தல் தேதி முன்கூட்டிய வெளியானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளளது. பாஜக நிர்வாகிகளுக்கு தெரிந்தது எப்படி என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ரவிக்குமாரும் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்,

கர்நாடக மாநிலத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பே பாஜகவின் ஐடி பிரிவைச் சேர்ந்த அமித் மாளவியாவின் ட்விட்டர் பக்கத்திலும் , டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் ‘ப்ரேக்கிங் நியூஸிலும் ‘ அது வெளியாகியிருப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் டெல்லி ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானது. இப்போது இந்தக் குளறுபடி அம்பலமாகியிருக்கிறது.
இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையரே பொறுப்பேற்கவேண்டும்.

தேதியைக்கூட பாஜகவுக்கு சொல்கிறார்களென்றால் வாக்கு பதிவு எப்படி நேர்மையாக இருக்கும்? எனவே வாக்குப் பதிவு யந்திரத்துக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response