எனக்குப் பல தடைகள் வருகின்றன – கமல் புலம்பல்

திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியல் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். படிப்பை முடித்து வெளியில் வந்தவுடன் உங்களைத் தாக்கப்போவது அரசியலும் ஊழலும்தான்.

கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் என்னை செல்லவிடாமல் தடுக்க பல தடைகள் வருகின்றன. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்தியில் இருக்கும் யாருக்கும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

திராவிடம் என்பது நாடு தழுவியது. திராவிடத்தை ஒழிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து. காலில் விழுவது, பொன்னாடை போர்த்துவது போன்ற செயல்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேடைகளில் இருக்காது” என்று தெரிவித்தார்.

Leave a Response