கமல்,ரஜினியைக் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

திமுகவின் இரண்டு நாள் மண்டல மாநாடு ஈரோட்டில் வெற்றிகரமாக நடந்தது.

பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, சுப.வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன் உட்பட ஏராளமானோர் மாநாட்டில் பேசினர்.

கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதி உரை ஆற்றினார்.

மு.க. ஸ்டாலின் பேசியதன் சுருக்கம்….

கருணாநிதியின் கட்டளையைக் கண்போல் காப்போம், தமிழை வளர்த்து தமிழைப் போற்றுவோம், மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம், வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்ற ஐம்பெரும் மொழிகளை கடைபிடிப்போம், இதை முன் வைத்து உரையைத் தொடங்குகிறேன்.

இந்த மேடையில் கருணாநிதி இல்லை என்றாலும் கோபாலபுரத்திலிருந்து நம்மை எல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து மாநில அரசு தீர்மானம் போட வேண்டாம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் போடுங்கள் என்றோம். தீர்மானம் போட்டார்கள், அதன் பிறகு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை.

அதன் பிறகு சட்டப்பேரவையில் நான் இதுபற்றி கேட்டேன், இன்னும் 6 நாட்கள் இருக்கிறது என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். நாங்கள் 99 எம்.எல்.ஏக்கள் தயாராக இருக்கிறோம், நீங்கள் கூண்டோடு ராஜினாமா செய்யத் தயாரா என்று கேட்டேன். ஆனால் ஓபிஎஸ் 29-ம் தேதி வரை பொறுப்போம் என்கிறார்.

நேற்று என்ன நிலை? காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதில் காவிரி கண்காணிப்பு குழு அமைக்கலாம் என்று ஒரு நாடகம். அதனால் தான் தீர்மானம் போட்டுள்ளோம். நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். வெறும் போராட்டத்தோடு முடிவதல்ல. தமிழகம் முழுதும் விவசாயிகளைத் திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.

அதோடு முடிந்துவிடாது, அனைத்துக் கட்சித் தலைவர்களோடு சேர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுக்க உள்ளோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகிறேன்.

மத்திய பாஜக அரசுக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இந்த மண்ணில் மதவாதத்தை நுழைய விட மாட்டோம். நாங்கள் இருக்கிற வரையில் பெரியார், அண்ணா, கருணாநிதி பூமியில் யாரும் வாலை ஆட்ட முடியாது. அப்படி ஆட்டினால் அந்த வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம்.

தற்போது புதிய புதிய கட்சிகள் எல்லாம் தோன்றுகின்றன. முதல்வர் கனவோடு கட்சி ஆரம்பிப்பதைக் காண முடிகிறது. சிலர் முழுவதுமாக இறங்க மீனம், மேஷம் என்று ராசி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் கியூவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கட்சி ஆரம்பிக்க அவர்கள் சொல்லக்கூடிய காரணம் நாங்கள் இங்குமல்ல, அங்குமல்ல நடுவில் நிற்கிறோம். மதில் மேல் பூனை போல இப்படிச் சிலர் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஒருவர் கூறுகிறார், அதை நிரப்பப்போகிறேன் என்று ஒரு சிலரும் கற்பனைக் குதிரையில் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ரஜினிகாந்தை ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

Leave a Response