ஈழத்தமிழர், இலங்கைத்தமிழர் ஆனது எப்படி? வைகோ, திருமாவுக்குக் கேள்வி

மக்கள் நலக் கூட்டணியின் செயல்திட்ட அறிக்கை பற்றி சுப.உதயகுமாரனின் விமர்சனம்…

மக்கள் நலக் கூட்டணியின் 37-பக்க குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையைப் படித்தேன். “ஆற்று மணல், தாது மணல், கிரானைட் முதலான கனிமவளக் கொள்ளைகளை தடுத்து நிறுத்திடுவோம்,” “கனிம கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு துணைபோன அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சங்கள். இதுபோன்ற பல நல்ல விடயங்கள் அறிக்கையில் இருகின்றன.

ஆனால் கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, மீத்தேன், ஓ.என்.ஜி.சி., கெய்ல், வேடிமலை, கவுத்திமலை, சைமா உள்ளிட்ட எந்த வார்த்தைகளும் இடம்பெற்றுவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக அறிக்கையை தயாரித்திருப்பது வேதனையாக இருக்கிறது. ஒருவேளை குறிப்பிட்டத் திட்டங்கள் பற்றிப் பேசவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களோ என்று நினைக்கலாம். ஆனால் அறிக்கை “ஸ்டெர்லைட் நாசகார நச்சாலை நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும்” என்று உரக்கப் பேசுகிறது. “சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளிக்கிறது.

“மீனவர் நலன்” எனும் தலைப்பின் கீழ், “இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதையும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறித்துச் செல்வதையும் தடுத்து, இந்நிகழ்வுகள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று மட்டும் சொல்கிறது அறிக்கை. தமிழக மீனவர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லையா? அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், உண்டுறை விடுதிகள், உல்லாச விடுதிகள், கப்பல் உடைக்கும் தளங்கள் எல்லாம் பிரச்சினைகளே இல்லையா? கச்சத்தீவு பற்றி எதுவுமே இல்லையே ஏன்?

நிலம் கையகப்படுத்தல் ஆபத்து முற்றிலும் மறைந்து விட்டதா? சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு இப்போது ஒரு பிரச்சினையே இல்லையா? ஈழத் தமிழர் பிரச்சினை “இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை”யானது எப்படி? மொத்தத்தில், இது என்ன இங்கிலாந்து மக்கள் நலக் கூட்டணியா அல்லது தமிழ் மக்கள் நலக் கூட்டணியா என்று குழம்ப வைக்கிறது இந்த அறிக்கை.

“தோழர்கள்” கட்சிகளின் “ஒன்றுபட்ட இலங்கை” போன்ற உருப்படாத நிலைப்பாடுகளும், வளர்ச்சி, இறையாண்மை, தேசியம் போன்ற விடயங்கள் குறித்த அவர்களின் சித்தாந்தக் குழப்பங்களும், குளறுபடிகளும் அறிக்கையை தமிழ் மக்களுக்கு பயனற்றதாக மாற்றியிருக்கின்றன.

அம்மா, அய்யா கொள்ளைக் கூட்டங்களிடமிருந்தும், சாதீயக் கட்சிகளிடமிருந்தும், பாசி்ஸ்டுகளிடமிருந்தும் வேறுபட்டு, தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்துவிடமாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

தமிழகத்தின் வருங்காலம் கவலையளிப்பதாகவே இருக்கிறது.

சுப. உதயகுமாரன்
நவம்பர் 4, 2015

Leave a Response