464 கோடி ஊழல் செய்ததாகப் புகார் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு

கோயம்புத்தூர் கணபதி ஜி.வி.ராவ் நகர் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் நேற்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில்….

நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2002 முதல் எஸ்.பி வேலுமணி பழக்கமானவர். 2016 ஆம் ஆண்டு ஆண்டு சனவரி மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி என்னிடம் முன் தொகையாக கமிஷன் கொடுத்தால், ‘சிவில் ஒர்க்’ கான்டிராக்ட் பணியைத் தருவதாக சொன்னார். அதன்படி, 2016 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி சென்னை, கீரின்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லமான ரோஜா இல்லத்துக்கு நேரில் சென்று 1 கோடி மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி 20 இலட்சம் ஆக மொத்தம் ஒரு கோடியே இருபது இலட்சம் மட்டும் கொடுத்தேன்.

மேலும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொன்னபடி அவருடைய உதவியாளர் பார்த்திபனிடம் 5 இலட்சம் கொடுத்தேன். ஆனால், அமைச்சர் சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க் கான்ட்ராக்ட் பணிகளைக் கொடுக்கவில்லை.

மேலும், கடந்த 20 ஆம் தேதி எஸ்.பி வேலுமணி கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து, ஆட்சி மாறிவிட்டது இனி எப்படி எனக்குப் பணி ஒதுக்குவீர்கள். எனவே, எனது பணத்தைத் திரும்பத்தாருங்கள் எனக் கேட்டேன், 20 நாட்களில் தருவதாகக் கூறினார். மேலும் எஸ்.பி. வேலுணியின் மூத்த சகோதரர் அன்புவின் வீட்டுக்கு, கடந்த 23 ஆம் தேதியன்று நேரில் சென்றபோது, அவர் சென்னை சென்றுள்ளதாகக் கூறினார்கள். நான் அவருக்கு எஸ்எம்எஸ் மூலமாக 23 ஆம் தேதி தொடர்பு கொண்டு என்னுடைய பிரச்னையை கூறினேன்.

முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், என்னுடைய அவசர தேவை எவ்வளவு என்று கேட்டார். நான் 5 இலட்சம் அடகுக் கடைக்கு வட்டி கட்டத் தேவைப்படுவதாகக் கூறினேன். உடனே, 5 இலட்சம் வங்கிக் கணக்கிற்கு வந்துவிட்டது. மீதிப் பணம் இரண்டு தவணையாக சில நாட்களில் திருப்பித் தருவதாகச் சொன்னார்.

மேலும், அமைச்சரின் உதவியாளர் பார்த்திபன் மற்றும் வினோத் ஆகியோர் சேர்ந்து, ‘நீங்கள் பொறுத்து இருங்கள். எங்களை அவசரப்படுத்தினால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் ’ என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு, நீங்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணியை நேரில் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டு என்னை அழைத்துச் சென்ற இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

அதன்பிறகு நான் கடந்த 19 ஆம் தேதியன்று முன்னாள் அமைச்சர் வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்தபோது பார்த்திபன் மற்றும் வினோத் சந்தித்ததைப் பற்றிக் கூறினேன், அதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி, ‘இனிமேல் என்னிடம் நீ கொடுத்த பணம் சம்பந்தமாக, என்னைச் சந்திக்க வரக்கூடாது’ என்று என்னைக் கடுமையாகப் பேசி அதற்கு மேல் மீறி வந்து பணம் கேட்டால் உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்து அட்ரஸ் இல்லாமல் தொலைத்து விடுவேன் என்றும் எனது செல்வாக்கு என்னவென்று உனக்குத் தெரியுமல்லவா என்று என்னை மிரட்டி அனுப்பி விட்டார்.

இது சம்பந்தமாக பல்வேறு குறுஞ்செய்தி மற்றும் பேச்சுபதிவு மற்றும் பிற ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. எனக்கு சிவில் ஒர்க்ஸ் கான்டிராக்ட் தருவதாகக் கூறி ஏமாற்றி 1 கோடியே 25 இலட்சத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவருடைய உதவியாளர் பார்த்திபன், வினோத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வேண்டும். மேலும் என்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறும், எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

சென்னை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 இடத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணியில் நெருங்கிய நண்பர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. கோவை மதுக்கரையில் உள்ள வேலுமணி உறவினரான பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீட்டில் காலை 6 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து வேலுமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் 2014 முதல் 2018 வரை நடந்த பல்வேறு திட்டப்பணிகளில் முறைகேடு என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் வேளாண் இயக்குனர் சந்திரபிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஷ்ட்ரக்ஷன், ராஜன் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் முதல்தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Response