கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது…..

உச்சநீதிமன்றத்துக்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்தப் பிறகும், அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

அணை கட்ட 2014-இல் கர்நாடக அரசு திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே அதனைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எந்த நீர்த் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதற்கு அ.தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி அணை கட்ட கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Response