வளர்மதி இருந்தது தெரியலையா? தலித் என்பதால் லியோனிக்கு எதிர்ப்பா? – அன்புமணிக்கு எதிர்வினைகள்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி, சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இவருடைய நியமனத்துக்கு பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது.

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்குப் படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களைத் தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அன்புமணியின் இக்கருத்துக்குப் பல எதிர்வினைகள் வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அதிமுக பேச்சாளர் வளர்மதி இப்பொறுப்பில் இருந்தார்.அவர் தகுதியானவரா? அப்போது ஏன் இதுபற்றிப் பேசவில்லை என்று பலர் கேட்கிறார்கள்.

மேலும் சிலர், திண்டுக்கல் லியோனி தலித் கிறித்துவர். ஒரு தலித்துக்கு இப்பொறுப்பு கொடுக்கப்பட்டதை ஏற்கமுடியாமல் எதிர்க்கிறார் என்று விமர்சனம் செய்கிறார்கள்.

Leave a Response