சாட்டை துரைமுருகன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் – விவரம்

ஜூன் 12 அன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை மிரட்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அனைவருக்கும் பிணை கிடைத்துள்ளது. ஆனால், சாட்டை துரைமுருகன் மீது மேலும் சில வழக்குகள் உள்ளதால் அவர் விடுதலை ஆகவில்லை.

அதன்விவரம்….

சாட்டை துரைமுருகன் திருச்சி வழக்கில் நேற்றைய தினம் பிணை பெற்ற நிலையில் இன்று திருவிடைமருதூர் நடுவர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கிற்காக முன்னிறுத்தப்பட்டார்.

இன்றைய வழக்கிற்கான பிணை மனு தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் முத்துமாரியப்பனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கரூர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே திருச்சியில் போடப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு ஆஜராகி நேற்றைய தினம் அனைவருக்கும் பிணை கிடைத்தது.

கடுமையான காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று திருவிடைமருதூர் நடுவர் நீதிமன்றத்தில் தம்பி சாட்டை துரைமுருகன் முன்னிறுத்தப்பட்டார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கறிஞர்கள் மணி செந்தில், ஆனந்த் ஆகியோர் ஆஜராகி பிணை மனு குறித்த விபரங்களையும், சிறையில் புத்தகம் படிக்கவும், வருமான வரி செலுத்துபவராக இருப்பதால் முதல்வகுப்பு சிறை கோரியும் அனுமதி கேட்டு நீதித்துறை நடுவர் அவர்களிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உரிய ஆணையை சிறைத் துறைக்கு பிறப்பிப்பதாக நீதித்துறை நடுவர் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்கு வருகிற ஜூன் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வருடம் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று அதிராம்பட்டினம் கூட்டத்தில் உரையாற்றிய காரணத்திற்காக இன்னொரு வழக்கு தம்பி துரைமுருகன் மீது திமுக அரசால் தொடரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் லால்குடி சிறைச்சாலையில் இந்த வழக்கில் துரைமுருகனை அரசு கைது செய்துள்ளது.

நாளைய தினம் அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் தம்பி சாட்டை துரைமுருகன் பட்டுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராக வேண்டும். இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில வழக்கறிஞர் பாசறை மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் உமர் ஆஜராக இருக்கிறார்.

பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த சிஏஏ வழக்குகளும் திரும்பப் பெற்றுவிட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் மீறி இப்போது சாட்டை துரைமுருகன் மீது சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக வழக்கு பாய்ந்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட சாட்டை துரைமுருகன் எதையும் சட்டப்படியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

Leave a Response