மோடி மீது ஆர் எஸ் எஸ் கடும் அதிருப்தி – வெளிப்படுத்தும் விடுதலை இராசேந்திரன்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“முதல்வர் டெல்லி பயணமும், அரசியல் பிண்ணனியும்”

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை முதன் முதலாக சந்திக்கப் போகிறார். கொரோனா நெருக்கடிகளை எதிர்கொண்டது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்று அடுக்கடுக்கான சாதனைகளை செய்து மக்கள் ஆதரவு என்ற வலிமையுடன் முதலமைச்சர் பிரதமரை சந்திக்க இருக்கிறார்.

மனுதர்ம ஆதரவு ஏடான தினமலர் தனது முதல் பக்க செய்தியில், பிரதமர் மோடி தமிழக முதல்வருடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவியேற்ற பிறகு முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய பல கடிதங்கள், நல்ல பலன்களை உருவாக்கித் தந்திருக்கின்றன.

மோடி பதவியேற்ற பிறகு முதன் முதலாக தான் அறிவித்த ஒரு கொள்கையை மாற்றியமைத்திருப்பார் என்று சொன்னால் அது தடுப்பூசி திட்டக் கொள்கை தான். தமிழக முதல்வர் உள்ளிட்ட 12 பாஜக அல்லாத முதல்வர்கள் எழுதிய கடிதமும், உச்சநீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடியும், தடுப்பூசிக் கொள்கையை திரும்பப் பெற வைத்துள்ளது.

2018 இல் மதுரையில் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய ஆட்சி நியமித்த குழுவிற்கு செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு முதலமைச்சர் கடிதம் எழுதிய அடுத்த இரண்டு நாட்களிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

காவிரி ஆணையத்தின் கூட்டம் கடந்த பல மாதங்களாக கூட்டப்படாமலேயே இருந்தது. முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி காவிரி ஆணையத்தின் கூட்டம் கூட்டப்படும் என்ற அறிவிப்பு இப்போது வெளிவந்திருக்கிறது.

நீட் தேர்வு இரத்து, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள், ஏழு பேர் விடுதலை, ஜி.எஸ்.டி க்கான இழப்பீட்டுத் தொகை என்று பல்வேறு உரிமைக் கோரிக்கைகளுடன் உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், ஆகியோர்களையும் முதல்வர் சந்திக்க இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

மத்திய ஆட்சி என்று பேசப்பட்ட நிலையை மாற்றி தமிழ்நாட்டு அரசு, ஒன்றிய ஆட்சி என்பதே சரி என்ற கருத்தை முன்வைத்து இந்தியாவில் நடப்பது ஒரு கூட்டாட்சி ஆட்சி முறை என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை பிற மாநில ஆட்சிகள் இப்போது திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிற நிலையில் ஒரு வலிமையான முதல்வராக பிரதமரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதல்வர். ஆனால் மோடியினுடைய நிலை என்ன ?

கடந்த மே 23 ஆம் தேதி புது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்ற இரகசிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் தலைமை மோடி ஆட்சியின் செயல்பாடுகள் மீதும், உ.பி ஆதித்யநாத் ஆட்சியின் செயல்பாடுகள் மீதும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது.

எப்போதும் இரகசியமாகவே வைக்கப்படுகின்ற இந்த செய்திகளை இப்போது பல முக்கிய நாளேடுகள் வழியாக கசிய விடப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் அடிமட்டத் தொண்டர்களிடமிருந்தும் மோடி ஆட்சிக்கு எதிரான கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு குவிந்து கொண்டு வருகின்றன.

ஆர்.எஸ் எஸ் தலைமை பிரபல தொழில் அதிபர்கள் அஜித் ப்ரேம்ஜி (விப்ரோ), உதய் கோதக் (கோடாக் மகேந்திரா பேங்க்) நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து கருத்துகளை கேட்டிருக்கிறது. அவர்களும் ஆட்சியைப் பற்றிய தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்து ப்ரண்டலைன் ஆங்கில நாளிதழ் ( ஜூன் 18 2021) விரிவான கட்டுரையை பெயர் குறிப்பிட விரும்பாத பல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை தலைவர்களின் கருத்துகளை கேட்டு உறுதிபடுத்தி வெளியிட்டிருக்கிறது.

மக்கள் செல்வாக்குடன் வலிமையான நிலையில் நின்று பலவீனமான நிலையில் இருக்கிற பிரதமரை சந்திக்கச் சென்றிருக்கிறார் நம்முடைய முதல்வர். ஆனால் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிற ஒரு செய்தி வேதனை அளிப்பதாக இருக்கிறது.

கோவை மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல் துறை அதிகாரிகள் படை சூழ ‘சேவா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பாரத மாதா படத்திற்கு பூஜை செய்திருக்கிறார்கள். அமைச்சர் சாமிநாதன் தன்னுடைய கருப்பு, சிவப்பு அடையாள வேட்டி கூட இருந்துவிடக் கூடாதென்று பட்டுவேட்டி சகிதமாக பங்கேற்று இருக்கிறார்.

மக்கள் நலத்திட்டங்களை எந்த அமைப்பு செய்தாலும் அதில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி ஒன்றிய அரசு தான் இந்தியாவில் நடக்கிறது என்பதை இலட்சிய முழக்கமாக திமுக கொண்டிருக்கிற நிலையில் இந்தியா ஒற்றை தேசம் என்று கூறி அதன் குறியீடாக பாரத மாதாவை முன் நிறுத்துகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், பாரத மாதா படத்திற்கு மாலையிட்டு பங்கேற்பது என்பது திமுக ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைக்கு அவமதிப்பு என்றே நாம் கருத வேண்டி இருக்கிறது. மற்றொன்று, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் முகநூலில் பதிவிட்டிருக்கிற செய்தி, திராவிட இயக்க ஆதரவு, திமுக ஆதரவு என்ற போர்வையில் பதுங்கி கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி முகநூலில் ஒரு இயக்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிற சுப்ரமணியசாமி சீடர்கள் மீதும் திமுக தனது கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.

ஊடுருவல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் அது பெரும் ஆபத்துகளை உருவாக்கிவிடும் என்பதை கடமையுடனும், கவலையுடனும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response