மோடியுடன் தனியாக சந்திப்பு – மு.க.ஸ்டாலின் 2 நாள் டெல்லி பயண விவரங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்துள்ளது.

மே 7 ஆம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது வழக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் தள்ளிப்போனது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.

இன்று காலை 7.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வரை, விமான நிலையத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்கின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசு திட்டங்கள், கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விவாதிக்கிறார். இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அளிக்கிறார்.

அத்துடன், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்த விவரங்களையும் பிரதமரிடம் முதல்வர் அளிக்க உள்ளதாக்க் கூறப்படுகிறது.

இந்தச்சந்திப்பு முடிந்ததும் பிரதமர் மோடியுடன் தனியாக சுமார் 10 நிமிடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாட இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு அரசியல் நிலவரங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லிணக்கம் குறித்து இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்

இன்று இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் தங்குகிறார்.

காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை நாளை சந்திக்க இருப்பதாகத் திமுகவினர் தெரிவித்தனர்.

2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு முதல்வர் சென்னை திரும்புவார் எனக்கூறப்படுகிறது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் முன்னதாகவே டெல்லி சென்றுள்ளனர்.

Leave a Response