கவிக்கோ விருது பெற்ற பாவலர் அறிவுமதியின் முழுமையான உரை – விருதுத் தொகையை கொரோனா நிதியாக வழங்கினார்

கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவாக கவிக்கோ விருது வழங்கப்பட்டுவருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான இவ்விருது பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கும் நிகழ்வு இணையம் மூலம் சூன் 5 ஆம் நாள் நடந்தது.

அப்போது விருது பெற்ற பின் பாவலர் அறிவுமதி ஆற்றிய உரை…..

என் உயிருக்கு இனிய உலகத் தமிழ் உறவுகளே கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை தமிழ் இயக்கம் சார்பாக கவிக்கோ விருது வழங்கும் விழா என்ற இந்த நாளில் இவ்வளவு நெகிழ்வாக கவிக்கோ அய்யாவையும் அவரது பிள்ளையாகிய என்னையும் நீங்கள் நெகிழ நெகிழ ஒரு மழையில் நனைத்த ஓர் உணர்வை உள்வாங்கிய இந்நெகிழ்வுத் தளத்தில் உணர்ச்சிவயப்பட்ட ஒரு கவிக்கோவின் பிள்ளையாக நான் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.

கல்வித்தந்தை ஐயா அவர்கள் மிக விரைவில் இன்னொரு நிகழ்வுக்கு போக வேண்டும் என்ற சூழலிலும் இவ்வளவு நேரம் இருந்து நம்முடைய இந்த விழாவை சிறப்பித்தமைக்காக கல்வி வேந்தருக்கு நான் முதலில் நன்றியை அள்ளித் தருகிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் கவிக்கோ என்ற அந்த உயரிய ஒரு ஆண் தாயைப் பெற்றது தான் என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ஆறுதலுக்கான ஒரு நெகிழ்வு வாய்ப்பு என்பதை இந்த நேரத்தில் அடிக்கோடிட விரும்புகிறேன்.

அவர் மட்டும் இல்லை என்றிருந்தால் நான் என் வாழ்க்கையில் நம்பிக்கையையும் இத்தகைய ஒரு கவித்துவ சொந்தக் காட்சியை தமிழில் கவிதையை செய்ய வேண்டும் என்ற சூச்சமத்தையும் அறியாத ஒரு 15 பக்கம் 20 பக்கம் எழுதுகிற கவியரங்க கவிஞனாகவே என் வாழ்க்கை முடிந்திருக்கும்.

அண்ணன் மீரா அவர்கள் என்னை கவிக்கோ விடம் ஆற்றுப் படுத்திய அந்த நாள்தான் என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் எழுத்தில் மிகச்சிறந்த ஒரு மடை மாற்றமாக நிகழ்ந்தது.
முன்னா இங்கே பேசிய பொழுது கண்கள் கலங்கிவிட்டன

அய்யா அவர்கள் எப்படி அந்த தனித்த அறைக்குள்ளாக விடியற்காலை 3 மணி நான்கு மணி என்றெல்லாம் எனக்கு இலக்கியத்தை ஊட்டி விட்டார் என்பதை அன்றைக்கு முன்னா முன்னி எல்லாம் சின்னப் பிள்ளைகள் அங்கே திருப்பத்தூரில் சென்று படிக்கக் கூடிய பிள்ளைகள் அவர்களுக்குக்கூட அந்த நினைவுகள் இருக்கின்றன. எனக்கு அவர்கள் பால் அப்பாவுக்கு தேனீர் கொடுத்த அந்த நினைவுகள் எல்லாம் இலண்டனிலிருந்து என் முன்னா சொல்லியபொழுது அந்த ஆண் தாய் தன் பிள்ளைகளுக்கான நேரத்தைக்கூட ஒதுக்கிவிட்டு என்னை தனித்த அறையில் அமர வைத்து என்னை உருவாக்கிய அந்த நாட்கள் என் நினைவுகளில் நான் எழுதியிருக்கிறேன் அதை
அப்படியே படித்து விடுக்கிறேன்

இரவு இரண்டு மணிக்குச் சென்றால் கூட அந்த வீதியில் அந்த வீட்டில் அந்த ஜன்னலில் மட்டும் வெளிச்சம் கசிந்து கொண்டிருக்கும்,
இளைத்த ஒளியில் லதாவின் இனிப்பு இசை அறை முழுக்க மணந்து கொண்டிருக்கும் உற்றுப் பார்த்தால் இருளில் நிறத்தில் எனது ஆண் தாய் வழக்கம்போலவே வெண்சுருட்டு புகைத்தபடி அங்கே அமர்ந்திருப்பார்.

உலகில் ஈரம் காயாத புதிய அறிவுகளை அவரது மௌனம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் கதவு தட்டி அழைத்ததும் வந்து திறப்பார்.

இதயமும் தெரியும் சென்று அமர்ந்ததும் சகோதர பாசத்தில் அந்தப் பள்ளியும் நலம் விசாரிக்கும் முன்னா முன்னி என்கிற செல்ல அழைப்புகள் போய் தேனீரும் பாலும் கொண்டுவரும் ஒரு குவளையில் குடிக்கத் தண்ணீர் நமது தாகத்திற்காகவே காத்துக்கொண்டிருக்கும்.

முக்காலியில் அடுக்கு கட்டியிருக்கும் சன்னலில் புத்தக முட்டுகள் அவரது விரல் பட்டு மலர நேரம் கேட்டுக்கொண்டிருக்கும்.

பல மடல்கள் அவர் மீதான செல்லக் கோபத்தோடு முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சாம்பல் கிண்ணம் அவரது அறிவின் செரிமானத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

இந்தச் சூழலில்தான் அந்த மனிதரிடம் நான் விடிந்தேன் ஆம் எனது சவப் பெட்டிக்குள் இருந்து ஒரு கவிஞனைக் எழுப்பி தனது இரவுகளால் அவனுக்கு உயிர் ஊட்டிய நெகிழ்வு மனிதர் அப்துல் ரகுமான்

எழுதுகோள் அவருக்கு ஆறாவது விரல், அறிவுமதியாகிய எனக்கு அது தான் மூன்றாவது மார்பு.

எனக்கு ஐயா என் ஆண் தாய் கவிக்கோ அவர்கள் அனுத்திமிர் அடக்கு என்ற என் மூளை அவர்தான் மிக அழகாக சுண்டக் காட்சி தமிழில் வருகிறது. இதை ஒரு தொகுதியாக எழுது என்று என்னைத் தூண்டியவர் அவர் என்னைப்பற்றி எழுதுகிறார், அணுத்திமிர் என்ற தொகுதி அறிவுமதியின் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.

உணர்வின் வெப்பத்தில் சொற்கள் கடைசி நிலை வரை சுண்டக் காச்சப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சொல்லும் ஒரு அணு தான் வீரியம் மிகுந்த சொற்களில் உறாய்வில் ஒரு அணு வெடிப்பு நிகழ்கிறது.

ஆனால், இந்த அணு வெடிப்பு அழிவு என்று ஆக்கத்தை உண்டாக்குகிறது இங்கே ஒவ்வொரு வெடிப்பின் போதும் ஒரு நாகசாகியும் ஒரு ஹிரோஷிமாவும் புதிதாகத் தோன்றுகின்றன.

கவிதையின் அற்புதம் இதுதான். அறிவுமதி என் வளர்ப்பு என் வார்ப்பு அன்று வார்ப்பது எனக்குப் பிடிக்காதது கவிதையின் குணங்கள் அவருக்கே சொந்தமானவை
சமய கட்சித் தலைவனைப் போல ஒரு நல்ல படைப்பாளன் தன்னைப் பின்பற்றுபவனை விரும்பமாட்டான்.

தன்னிடம் வாங்கிக் கொண்டு வளர்கிறவனைத்தான் விரும்புவான் அறிவுமதியை நான் விரும்புகிறேன் அப்துல் ரகுமான் 9.5.88 ஐயா அவர்கள் எனக்காக எழுதியது.

1982இல் அறிவுமதி ஆகிய நான் எழுதியது…

ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய இந்த உணர்வுகள் அறிவுமதி என்ற ஒரு படைப்பாளனைப் பற்றி தான் தூர நிறுத்தி எழுதிய என் உணர்வு

எனது பெயருக்கு முன்னால் கவிஞன் என்றோ கவிஅரசன் என்றோ அடைமொழி கொடுத்து எந்த நாளிலும் என்னை அவமானப்படுத்தாதீர்கள்.

என் பெயரே என்னை அடையாளம் காட்டட்டும் பெயர்களுமற்று மனித பொதுப்பெயரில் கரைந்து போகவே நான் ஆசைப்படுகிறேன். பெயர்களே தெரியாத இலட்சியவாதிகள் தான் ஒரு தேசத்தின் உயிர் வேர்களாக திகழ்கிறார்கள் என்கிற உண்மையை உணர்ந்தே இதை நான் அழுத்திச்சொல்கிறேன்.
புத்தகங்களை விடவும்
மனிதர்களையே நான் அதிகமாகப் படிக்கிறேன்.

சேரிகளும் சிற்றூர்களுமே எனக்கு ஆய்வு நூல்கள் எனவே இந்த கவிதைகள் என்பவை ஒரு தனி மனிதனுக்குரிய சுயசிந்தனையின் வெளிப்பாடுகள் அல்ல
சேரிகளில் கேட்ட ஊர்களில் பார்த்த நூல்களில் படித்த நண்பர்களோடு விவாதித்த கருத்துகளின் கூட்டு வெளிபாடுகளாகவே இவற்றை நான் கருதுகிறேன்.

ஏறக்குறைய அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவனாக நின்றே இந்தக்கவிதைகளை நான் பேசியிருக்கிறேன். அவர்களது மனக்குமுறல்களின் வெளிப்பாட்டுக் கருவியாய் என்னைப்பயன்படுத்திக் கொள்வதையே நான் பெருமையாகவும் கருதுகிறேன் என்று 1982இல் எழுதினேன்.

அப்படித்தான் இன்றைய பெருந்தொற்று நெருக்கடியில் உயிருக்கு அச்சப்பட்ட ஒரு கொடிய சூழலில் சூழ்ந்திருக்கும் இந்தச் சூழலில் கடைசி மழைத்துளி என்ற அந்த எந்நூலில் நான் எழுதிய சில வரிகளையும் இன்றைய சுற்றுப்புறச் சூழல் நாளாக அமைந்த இந்தக் கவிக்கோ விருது நாளில் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.

கடைவீதிக்கு வந்தாயிற்று தண்ணீர் பொட்டலங்கள் காற்றுப் பொட்டலங்களும் வருவதற்குள் விழிப்போம் நமது மூச்சு
வேர்களைத் தேடி புறப்படுவோம் காடுகளை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட நாம் காடுகளிடமே சென்று சரண் அடைவோம்.

காடு அம்மா மூத்த மூத்த அம்மா மரப்பால் யாவற்றையும் மன்னிப்பாள் மடியள்ளி வைத்துக்கொண்டு மழையூத்துவாள் மழையரும்பி மழையரும்பி மழையாவோம் தாவரங்களாவோம். நீளும் கரங்கள் கோர்த்து தோப்பாவோம். கூட்டிசைப் பாடல்களால் பறவைகளாவோம். ஆயிரமாயிரம் நூற்றாண்டுகளைத் தாண்டிய பேத்திகளுக்காகவும் பேரர்களுக்காகவும் பூமியை வானத்தை தூய்மை செய்து ஞாயிற்றுக் கிண்ணத்தில் மழையூற்றி வைப்போம்.

கருவுற்ற பெண்ணிடம் மரக்கன்றுகள் தந்து திங்களுக்கு ஒன்றாக நடச்சொல்லி பத்தாவது திங்களில் அவளை பதினோரு குழந்தைகளுக்கான தாயாக பார்ப்போம்.

கவிக்கோ விருது தந்திருக்கிறீர்கள்.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய கவிக்கோ வும் இருந்து அவருடைய கையாளும் இதைப்பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு பிள்ளையின் வருத்தம் வலி எனக்குள் இருந்தாலும் அவருக்கு இணையாக என்னை வாணியம்பாடியில் வளர்த்தெடுத்த அண்ணன் அப்துல்காதர் அவர்கள் இக்பால் அவர்கள் குடியேற்றத்திலே பதுமுனார் அவர்கள் சோலையண்ணன் அவர்கள் இவர்களெல்லாம் ஐயாவுடன் என்னை பாதுகாத்தவர்கள் அவர்கள் மட்டுமல்ல அந்த அண்ணிகள் அந்த குழந்தைகள் மஹஜபின் ராணி அதைப் போலவே காதர் அண்ணனுடைய செல்லப்பையன்.

ஐயா அவர்கள் இக்பால் அண்ணன் வீட்டிற்கு வருகிற போது ராணி சின்ன பிள்ளை நான் வானம் என்பார் ராணி நான் விண்மீன் என்பார் இப்படி சின்னச்சின்ன ஒரு மொழியை என்னும் ஒழுகுகளில் ஒழுக வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குள்ளும் கவிதையை ஒழுத வைத்து அழகு பார்க்கிறவர் என் கவிக்கோ.

அவர்தான் விழுப்புரத்தில் இருந்து வந்த ஜெயச்சந்திரன் ராமமூர்த்தி என்ற என் அன்புத் தம்பிகளையெல்லாம் அவ்வளவு அழகாக வரவேற்று அவர் அந்தத் தாய்மையை உருவாக்கினார்.

எனக்கு அவர் தனித்த அறையில் இருந்து அவர் உலக இலக்கியங்களை எல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுத்த அந்தப்பாடல் குறிப்புகள் தான் ஜீனியர் விகடனில் ஒரு அறிவுமதிக்காக அவர் தயாரித்த குறிப்புகளாக இருக்கலாம்.

ஆனால் அது என்னுடைய வாணியம்பாடியில் இலக்கிய வட்டத்திற்குள்ளாக சுழன்று வந்தது அதன் பிறகு ஜீனியர் விகடனில் அவர் எழுதினார், பாக்யாவில் எழுதினார், தமிழ் இந்துவில் எழுதினார். ஏறக்குறைய ஒற்றை அறிவுமதியை வாணியம்பாடியில் உருவாக்கியவர்.

சென்னைக்கு வந்த பிறகு இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை தங்கைகளை எழுத வைத்து அழகு பார்த்த ஒரு மிகச் சிறந்த கவிதை ஆசான் பாரதி பாரதிதாசன் சுரதா அதுவும் சுரதாவை அவர் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் பேச வைத்து பேச வைத்து அந்தப் பேச்சுகளுக்குள்ளாகவே கவிதைகளை உள்வாங்கி அடடா அடடா அடடா போட்ட ஒரு மிகச்சிறந்த அந்த மனிதர் அவருக்குள்ளாகவே ஒரு ஞான ஆழம்
அதைப் போலவே ஒரு விஞ்ஞானி என்று கூட அவரைச் சொல்லுவேன்.

தொன்மங்களுடைய மானுடவியல் அறிஞன் என் கவிக்கோ அவருக்குள்ளாக என்று சொன்னால் அது அவர் முழுமை அடைய மாட்டார்.

அவ்வளவு மிகச்சிறந்த ஓர் அறிஞனாகத்தான் அவரை நாங்கள் பார்த்தோம்.

லிங்குசாமி யாக இருந்தாலும் பிருந்தாவாக இருந்தாலும் பழனிபாரதியாக இருந்தாலும் இசாக்காக இருந்தாலும் நாங்களெல்லாம் அவரோடு பேசுகிறபோது நாங்கள் அவர் பிள்ளைகளைப்போல் இன்றைக்கு எழுதுகிற அல்லது நேற்றைக்கு தான் எழுதத் தொடங்கியவாராக இருந்தாலும் அல்லது மிகப்பெரிய ஆழமிக்க
ஒரு ஆளிடம் பேசினாலும் அவரிடம் இருக்கிற அனைத்து அறிவையும் ஒரு நிலாவைப்போல் ஒரு ஞாயிறைப்போல் அப்படியே அள்ளிக் கொட்டி அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும் என்ற தாய்ப்பறவையினுடைய அந்தத் தவிப்பு அவருக்குள்
அவரால் உருவான அறிவுமதி என்கிற பிள்ளையை நான் இந்த ஊரில் தான் பிறந்தேன் இன்றைக்கு இந்த ஊரில் ஒரு மழை பொழிந்த இந்த மாலை நேரத்தில் இந்த விருதினைப் பெறுகிற இணையதளத்தில் பெறுகிற இந்தச் சூழலில் இந்த என் கிராமத்தில் என் அம்மா சின்னப்பிள்ளை ஒரு கைநாட்டு அம்மா என் அப்பா ஒரு கையெழுத்து அப்பா அவர் வள்ளுவர் நூலகம் என்று வழிநடத்தினார்

திராவிட இயக்கம் வளர்ந்து கொண்டிருந்த அந்தச் சூழல் 1949இல் அவர் உருவாக்கிய அந்தக்கழக கொட்டாயில் இருந்த நூல்களும் நாள் இதழ்களும்தான் என்னை வளர்த்தெடுத்தன.

அதைப்போல திராவிட இயக்கத்தலைவரான தந்தைப் பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் நாவலர் பேராசிரியர் சிற்றரசு சத்தியவாணிமுத்து என்வி. நடராசன்இவர்களெல்லாம் பத்து மைல்களுக்கு அப்பால் எட்டு மைல்களுக்கு அப்பால் அவர்கள் பேசிய பேச்சுக்களை எல்லாம் போய்க் கேட்டுக் கேட்டு கேட்டு அந்த காதுகள் வழியே குடித்த தமிழ்தான் இன்றைக்கு என் எழுது விரல்களில் தமிழாய் அது கசிந்து கொண்டிருக்கிறது.

திரைப்படங்களிலும் அன்றைக்கு தூய தமிழைக் கேட்ட அந்த வாழ்க்கை, எங்கள் காலத்திற்கு முன்னால் தமிழ் எப்படியிருந்தது? இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கிற இந்தத் தமிழையெல்லாம் ஒரு பொதுத்தமிழாக மாற்றி இன்றைக்கு உலகத்தமிழர் உலகத்தமிழ் என்று சொல்லவைத்த அந்த வரலாற்றுச் சூழல் திராவிட இயக்கத்துக்குள்ளும் இருக்கிறது பொதுவுடமை இயக்கத்துக்குள்ளும் இருக்கிறது.

எனவே,தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் மார்க்ஸ் அவர்களுடைய அந்த கருத்துக்கள் என் தமிழுக்குக் கிடைத்த விளைந்த பொருட்களைத் தான் நான் இன்றைக்கு எனக்குள்ளாக தமிழ்நாடு என்று சொல்லாதே என்று சொல்லுகிற ஒரு காலகட்டச் சூழலில் நான் என்ன செய்ய முடியும்?

எதிர்கத் துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என்ற அந்தச் சூழலில் நான் இந்த விருதைப்பெறுகிற இந்தச் சூழலில் இந்த ஒரு இலட்சரூபாய் என்பது என்னுடைய குடும்பத்திற்கு வந்தால் அது ஒரு மாதத்திற்கோ? இரண்டு மாதத்திற்கோ? ஆனால், இன்றையச் சூழல் பெருந்தொற்றுச்சூழல்.

இன்றைக்குத் தமிழ்நாடே தன்னுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஒப்பற்றப்பணியை தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயமுத்தூரிலே தன் உயிரையும் பணயம் வைத்து மருத்துவமனைக்கு உள்ளே போய் நோயாளிகளையும் நலம் விசாரித்து செவிலியர்களையும் மருத்துவர்களையும் கூட அவர்களுக்கு உற்சாகப்படுத்துகிற ஒரு பாதுகாப்புத் தாயாக அவர் செயல்படும் விதம் அவருக்குள்ளாக இருக்கிற அந்த நிதானம், அந்த நலச்செயல்களில் கண்ணாடிச்செயல்களாக எல்லாமே வெளிப்படையாக அவர் செய்கிற இந்த அரசு நாள்கள் மிக்க மகிழ்ச்சியை ஊட்டுகின்றன.

இந்தத் தமிழ்நாட்டை நாம் ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்க வேண்டுமானால் இன்றைக்கு உலகத் தமிழர்களுடைய மிகச்சிறந்த வல்லுநர்கள் உலக நாடுகள் நெடுக இருக்கிறார்கள், அவர்களுடைய அறிவுரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டு அரசு நடத்துகிற ஒரு முதல்வராக ஐயா முதல்வர் அவர்கள் விளங்க வேண்டும்.

ஏனென்றால், அவ்வளவு பெரிய வல்லுனர்கள் கனடாவில் இருக்கிறார்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் இலண்டனில் இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள் அரபு நாடுகளிலும் இருக்கிறார்கள்.

எனவே அவர்களிடமெல்லாம் இந்தத்தமிழ்நாட்டை இன்னும் மிகச்சிறப்பாக ஒரு புதிய அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக இதனைக்கொண்டு வருவதற்கான சிந்தனைகளில் உலகத்தில் இருக்கிற அனைத்து தமிழ் அறிஞர் வல்லுனர்களையும் ஒரு குழுவாக அமைத்து முதல்வர் அவர்கள் இந்தத்தமிழகத்தை செயல்படுத்தி ஒரு மிகச்சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களும் ஒரு நல்ல செயல் நடக்கிறபோது அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அதற்கு உறுதுணையாக இருந்து தமிழன் தமிழனை முன்னேற்றுவதற்கு எந்த இடையூரும் செய்யாமல் அனைத்து தமிழர்களும் நீங்கள் தேர்தல் நேரத்தில் விட்டுக்கொடுங்கள். ஆனால், சாதிகளாக பிளவுடாதீர்கள் மதங்களாக பிளவுடாதீர்கள்.

இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணையவில்லை என்றால் நம் வரலாறு எங்கோ போய்விடும். எனவே விழிப்புணர்வாக இருந்து நல்ல அதிகாரிகள் இங்கே உறுதுணையாக இருக்கிறார்கள், நல்ல செயல் திட்டங்களைச் செய்ய வேண்டும் என்ற நிதானம் இந்த முதல்வருக்கு இருக்கிறது, எனவே, நம்பிக்கையோடு அவருக்கு உறுதுணையாக இருந்து இந்தப் பெருந்தொற்றிலிருந்து தமிழர்களுடைய உயிர்கள் போதலுக்கான அந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நாம் அனைவரும் அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.

முதல் நிலைப் பருவத்தில் நானும் இந்தப் பெருந்தொற்றுக்கு ஆளானேன். என்னுடைய தம்பிகள் உலகநாடுகளிலிருக்கிற என் தங்கைகள் என் அண்ணன்கள் அவர்கள் உறுதுணையில் அவர்கள் தந்த தொகையால்தான் இன்றைக்கு உங்கள் முன் நான் சேலத்தில் ஒரு மருத்துவமனையில் நான் உயிர்காக்கப்பட்டேன்.

விருத்தாசலத்தில் இருக்கிற முருகதாஸ் என்கிற அந்த மருத்துவரும் மகுடமுடி என்ற என் உயிருக்கினிய தச்சறா பாளையத்தில் இருக்கிற அந்த மருத்துவருமாக இணைந்து என் தம்பி லிங்குசாமியினுடைய அந்த வார்த்தைக்கு என் அண்ணன் அறிவுமதியை எப்படியாவது பிழைக்க வைத்து விடுங்கள் என்று சொன்ன அந்தச்சூழலில்தான் சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் நான் காப்பாற்றப்பட்டேன்.

எனவே எனக்கு என் நண்பர்கள் தந்த அந்தத் தொகைதான் என் உயிரைக் காப்பாற்றியது.

இன்றைக்கு கவிக்கோ ஐயா தருகிற ஒரு இலட்சம் விருது என்பது கவிக்கோ அவர்களே மனமுவந்து தருவதுபோன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறபெருந்தொற்றின் பெருந்தொகை நிதிக்காக கவிக்கோ அவர்கள் விருதாகத்தருகிற இந்த ஒரு இலட்சம் ரூபாவை நான் முதல்வர் பெருந்தொற்று நலநிதிக்கு நான் வழங்கி நான் என்னுடைய கடமையைச்செய்கிறேன்.

இதை கவிக்கோவின் பிள்ளையாக நான் செய்கிறேன். என் தம்பிகள் என்தங்கைகள் என்னோடு இருக்கிற என்கவிதை உலகமே இந்த ஒரு இலட்ச ரூபாயை முதல்வருக்குத் தருவதாக, நான் மனமகிழ்ச்சியோடு இந்த ஒரு இலட்சரூபாயை முதல்வருக்கு சிறுதொகையாக இருந்தாலும் இது எங்களுடைய கவிஞர்கள் சார்பாக உங்களுக்குத் தருகிறோம்.

இது கவிக்கோ அறக்கட்டளையும் தமிழ் இயக்கமும் முதல்வரிடம் ஒப்படைக்குமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழர்களே என்னுடைய அன்பான கவிக்கோ உறவுகளே நான் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் என்றும் வாழ்வேன்.

தமிழீழத்திற்காகவே என்னுடைய எண்ணங்களை எழுத்துக்ளாக்கிக்கொண்டிருப்பேன் என்று சொல்லி, என்னிடம் நம்பிக்கை இருக்கிறது,
கேளுங்கள் தருகிறேன்
என்னிடம் வாழ்க்கை இருக்கிறது,
கேளுங்கள் தருகிறேன்,
என்னிடம் புன்னகை இருக்கிறது
கேளுங்கள் தருகிறேன்

ஆனால் தயவு செய்து என்னிடம் இருக்கும் மரணத்தை மட்டும் கேட்டுவிடாதீர்கள் என் தமிழுக்காகவும் தமிழினத்திற்க்காகவும் தமிழீழத்திற்க்காகவும் வைத்திருக்கிறேன்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

– அ.தமிழ்ச்செல்வன்

Leave a Response