டாக்டர் கிருஷ்ணசாமி உண்மையிலேயே படித்தவரா? இந்த வரிக்கு அர்த்தம் தெரியுமா? – வெடிக்கும் விமர்சனங்கள்

அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்திய அரசு என்று சொல்லாமல் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுப் பேசினார்.

இதற்கு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது….

இறையாண்மை மிக்க இந்திய அரசை மிகவும் எளிதாக ’ஒன்றிய அரசு’ என்று கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்துகிறீர்கள். இந்தியா ’ஒன்றியம்’ என்றால், தமிழ்நாடு என்ன ’ஊராட்சியா’?

நீங்கள் நீதிக்கட்சி வழி வந்தவர் என்பதைப் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். நீதிக்கட்சி இந்தியச் சுதந்திரத்தை நேசித்ததில்லை என்பதும்; பாரத தேசத்தை ஒன்றாமல், பிரிட்டிஷ் அரசையே ஒண்டியிருந்தது என்பதும் தானே வரலாறு. நீங்கள் மட்டும் அதற்கு என்ன விதிவிலக்காகவா இருக்கப் போகிறீர்கள்?

நீங்கள் பல தேச பறவையாக பலகாலம் இருந்த காரணத்தினால், இந்த தேசத்தின் மீது பாசமும், பற்றும் முழுமையாக இருக்கும் என்று எப்படிக் கருத முடியும்?

ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான அரசியல் ரீதியான விருப்பு, வெறுப்புகளை நாம் பிறந்த தேசத்தின் மீது காட்டக்கூடாது.

பாரத தேசத்தை எத்தனையோ பேர் ஆண்டு இருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக மோடி ஆண்டு கொண்டிருக்கிறார்; இன்னும் சில காலம் அவர் ஆளலாம். அதற்குப் பிறகு அவரும் போய்விடலாம். மோடிக்கு முன்பும் இந்தியத் தேசம் இருந்தது; மோடிக்கு பின்பும் தேசம் இருக்கும்.

ஒரு கட்சியின் மீதான இன-அரசியல் ரீதியான வெறுப்பை உமிழ்வதற்காக இந்தியத் தேசத்தையே ’ஒன்றியம்’ என்று உள்நோக்கத்தோடு குறிப்பிடுவது நீங்கள் பதவியேற்றுக் கொண்ட போது எடுத்துக் கொண்ட ரகசிய பிரமாணத்திற்கு எதிரானதும், சட்டவிரோதமானதும் ஆகாதா?

ஒரு கிராம அளவிலான பஞ்சாயத்தை ஊராட்சி என்கிறோம். 30-40 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியைத் தமிழில் ’ஒன்றியம்’, ஆங்கிலத்தில் ’Union – block’ என்கிறோம். ஆனால் மிகமிகச் சிறிய அந்த ’ஒன்றியம்’ என்ற அலகை பரந்துபட்ட இந்திய அரசுடன் ஒப்பிட்டுக் குறிப்பிடுவது எப்படி முறையாகும்?

பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து இந்திய அரசை ’ஒன்றியம்’ என பொதுதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது குதர்க்கமானதும், ஆணவப்போக்குமானதும் ஆகும்.

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பதற்காக பழனிவேல் தியாகராஜனின் இதுபோன்ற தவறுகளை எல்லாம் கண்ட பின்னரும் பலரும் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, எல்லா காலகட்டத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று எண்ணி விடக்கூடாது. இதை எல்லாம் தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறார்? என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதற்கு கடும் எதிர்வினைகள் வருகின்றன.

இந்தியா ஒன்றியம் என்றால் தமிழ்நாடு என்ன ஊராட்சியா என்று பிடிஆரைப் பார்த்து கேள்வி கேட்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

சங்கிகளோடு சேர்ந்தால் எல்லோரும் இப்படித்தான் ஆகிவிடுவார்களா?

அவர் படித்தவர்தானே? இந்திய ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் தொடக்கத்திலேயே,

“India, that is Bharat, shall be a Union of States”

என்று இருக்கிறதே? இந்த வாசகத்தை எப்போதாவது அவர் படித்திருப்பாரா? இல்லையெனில் இப்போது படித்துக்கொள்ளட்டும் என்று பலர் கூறிவிருகிறார்கள்.

அரசியல் சட்டப்புத்தகத்தில் உள்ளது தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டார் கிருஷ்ணசாமி என்கிறார்கள்.

Leave a Response