நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறையும் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
எனவே, தொழிற்சாலை தேவைகளுக்குப் பயன்படும் ஆக்சிஜனை மருத்துவத் தேவைகளுக்கு திசை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிச்சை எடுத்தாவது, திருடியாவது மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது குறித்த தகவல் வெளியானது.
இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு தம் அதிருப்தியைத் தெரிவித்தது. இதுகுறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எந்தவித ஆலோசனையையும் மாநில அரசுடன் நடத்தவில்லை.
பிற மாநிலங்களுக்கு உதவ தமிழக அரசு எப்போதும் தயாராகத்தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலும் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்” எனத் தெரிவித்தார்.
தற்போது இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு வழக்கைக் கையிலெடுத்துள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றை வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிவிக்க தமிழக தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து நீதிமன்றங்கள் கவலையுடன் பார்த்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வே தாமாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் மிகக் காட்டமாக மத்திய அரசு விமர்சித்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தாமாக மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.