எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும்போது விலையேற்றுவதா? – வைகோ கேள்வி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில்….

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், கொரோனா கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வருவது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயிக்கும் போக்கு நல்லதல்ல. கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பெற்று, அதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் வெளிச் சந்தையிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வருவது ஆபத்தாகும்.

கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் விலையை இரு மடங்கு உயர்த்தி இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்து மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த முனைய வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பெரும் கேடு விளைவிக்கும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a Response