மதுக்கடைகளை எதிர்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு – வழக்கை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை இரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமலைக்கூடலில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பெண்கள் உள்பட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின் போது டாஸ்மாக் மதுக்கடை மீது கல்வீசித் தாக்கியதாக அதன் விற்பனையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஜெயக்குமார், 10 பெண்கள் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் என்பவர் மட்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், இவர்கள் அனைவரும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டார்கள். அரசு சொத்துக்குச் சேதம் விளைவித்தார்கள். டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினார்கள். வன்முறையில் ஈடுபட்ட காரணத்தினாலே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே முழு விசாரணை நடைபெற்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணையின் இறுதி அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுவிட்டது. இந்த தருணத்தில் வழக்கை இரத்து செய்து உத்தரவிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், வருமானத்தைப் பெருக்க மதுக்கடைகளை அரசு அமைத்தாலும் பாதிக்கப்படுபவர்கள் டாஸ்மாக் கடையை எதிர்க்க உரிமை உண்டு என்று கூறி டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்து உத்தரவிட்டார்.

குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 95ன் கீழ் விதிவிலக்கு அளித்து போராட்டக்காரர்கள் மீதான வழக்கை இரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Response