தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார்.
உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாகச் செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.
59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
விவேக்கின் திடீர் மறைவு அனைவரையும் பேரரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
விவேக் நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால்,விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளீயிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அவருக்கு எமது அஞ்சலி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.