எதிர்ப்பு மற்றும் விதிகளை மீறி கிரிஜா வைத்தியநாதனுக்கு புதிய பொறுப்பு – மத்திய அரசு வழங்கியது

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த வழக்குகளை விசாரிக்க டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சென்னை கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன.

இவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழகத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோர் பெயர்களைப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துரு அனுப்பியது. அதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

அதன் அடிப்படையில் புணேயில் உள்ள பசுமை தீர்ப்பாய மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம்.சத்தியநாராயணனையும், தொழில்நுட்ப உறுப்பினராக கே.சத்யகோபாலையும், சென்னை தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனையும் நியமித்து தீர்ப்பாயத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபோதே, கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை இரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவில் தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 5ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும் அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் ஐந்து ஆண்டுகளுக்கு இல்லை.

குறிப்பாக 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அவர் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இவரது நியமனம் தேசியப் பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்ற காரணத்தைக் கருத்தில் கொண்டு இவரது நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவரை தொழில்நுட்ப உறுப்பினராக நியமித்துள்ளனர்.

Leave a Response