ஐகானுக்கு நோபல் விருது – பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு

2017 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல்பரிசு ஐகான் அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்து பூவுலகின்நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…..

1985ல் நோபல் அமைதிக்கான பரிசு பெற்ற அணு ஆயுதப் போர் எதிர்ப்புக்கான சர்வதேச மருத்துவர்கள் அமைப்பால் 2007ல் தொடங்கப்பட்டது ஐகான் (அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரச்சாரம்) அமைப்பு.

கடந்த பத்தாண்டுகளாக, இந்த அமைப்பு உலகம் முழுவதுமுள்ள 15,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு பல பிரச்சாரங்களை மேற்கொண்டது. கடந்த ஜூலை மாதம் அணு ஆயுதங்களுக்கு எதிராக 122 நாடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது ஐகான் அமைப்பு.

இப்படிப்பட்ட ஒரு அமைப்பு, இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானது.

உலக அமைதியை நோக்கிய முக்கியமான ஒரு செயல்பாடாக அணு ஆயுத அழிப்பு இருக்கும் என்பதில் மனிதத்தில் நம்பிக்கை கொண்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகைய செயல்பாடுகளுக்காக மட்டுமே இயங்கி வரும் ஐகானுக்கு 2017க்கான அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது, அணு ஆயுத ஒழிப்பு பிரச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு நகர்வு.
பூவுலகின் நண்பர்கள் இந்த விருது அறிவிப்பைப் பெரும் மகிழ்வோடும் நம்பிக்கையோடும் வரவேற்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தருணத்தில் “காந்தியின் தேசமான” இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அணு ஆயுத ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response