ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் – மருத்துவர் இராமதாசு கருத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைச் சந்திப்பதற்காக சசிகலாவுக்கு கர்நாடக சிறைத் துறை 5 நாள் விடுப்பு வழங்கியது.

இதையடுத்து, நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து புறப்பட்ட அவர் இரவு 9.30 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு வந்தார். அவருடன் டிடிவி தினகரன் உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்தனர்.

காரில் வந்த சசிகலாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். சென்னையிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் நேற்றிரவு தியாகராய நகர் பகுதிகள் மட்டுமின்றி சென்னைக்குள் சசிகலா வந்த வழிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைக் கணக்கில் கொண்டு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு,

சென்னையில் சசிகலா வாகன அணிவகுப்பால் போக்குவரத்து நெரிசல்: செய்தி- இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் ஜெ.வின் வாரிசு சசிகலா என்பதை

என்று ட்வீட் செய்துள்ளார்.

இரட்டை இலை யாருக்கு என்கிற போராட்டம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் கருத்து கவனிக்கத் தக்கதாக ஆகியிருக்கிறது.

Leave a Response