ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று ( மார்ச் 10) வெளியிடப்பட்டது.
அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வறிப்பு வெளியான சில மணி நேரங்களில் அந்தத் தொகுதி திமுக முன்னணியினர் மத்தியில் சாத்தூர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் பேசிய குரல்பதிவொன்று உலா வரத் தொடங்கியுள்ளது.
அதில், அதிமுக சார்பில் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார் என்கிற அறிவிப்பு வந்த நிமிடம் முதல் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்கிற கருத்துகள் வருகின்றன. இந்த மமதை வேண்டாம்.
வைகைச்செல்வனை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அவர் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவர். அதனால் நாம் மிகவும் தீவிரமாக வேலை செய்தாக வேண்டும்.
தேர்தல் களம் அப்படியேதான் இருக்கிறது. அது போர்க்களம் போன்றது. அதில் வென்றாக வேண்டும். அதனால் நாம் தான் வெற்றி பெறுவோம் என்கிற மமதையை விட்டுவிட்டு தீவிரமாக வேலை செய்தாக வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அந்தக்குரல் பதிவில் ஒன்றுக்குப் பலமுறை வைகைச்செல்வனை எளிதாக எடைபோட்டுவிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இதன்மூலம் இரண்டு செய்திகள் தெரிகிறது.
ஒன்று – இன்னும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை, இந்நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன் மகன் பேசியிருக்கும் குரல்பதிவின் மூலம் அருப்புக்கோட்டை தொகுதியில் சாத்தூர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார் என்பது.
இன்னொன்று, வைகைச்செல்வன் என்று அதிமுக அறிவித்தவுடன் அவரைக் கண்டு சாத்தூர் ராமச்சந்திரன் அஞ்சுகிறார் என்பது.