மதுரையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் கே. ராஜு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்ற அப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் உரையாற்றினார்.
அவரது உரையில்,
புரட்சித்தலைவி அம்மா முதல்வராக இருந்தபோதும், மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. மாநில நலன் சார்ந்து சில கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டார். காலம், நிலைமை, சமூக மாற்றங்களுக்கு ஏற்ப அதிமுக அரசு செயல்படுகிறது.
இப்போதைய அரசு, பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக தகவல் பரப்புகின்றனர். நிர்வாக ரீதியாக மட்டுமே மத்திய பாஜக அரசுடன் இணக்கமான போக்குடன் உள்ளோம். அரசியல் ரீதியாகவோ, அடிமையாகவோ அதிமுக செயல்படவில்லை. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தைப் போல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், மாநிலத்துக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். அம்மா இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்த பிற கட்சிகளைப் போல பாஜகவும் ஆசைப்படுகிறது. ஆனால் தீர்ப்பு மக்கள் கையில்தான்.
பாஜக சொல்வதை எல்லாம் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையைத்தான் அதிமுக பின்பற்றுகிறது. தமிழகத்தில் இவர்தான் ஆள வேண்டும் என எந்த நிர்பந்தமும் மத்திய அரசு விதிக்கவில்லை.
அம்மா முதல்வர் பொறுப்பில் இல்லாத நேரத்திலும் அவரது வீடு தேடி வந்து சந்தித்தவர் பிரதமர் மோடி. ஜெயலலிதா மீது பிரதமர் வைத்துள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த அரசு காப்பாற்றப்பட வேண்டும். மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக சில உதவிகளைச் செய்கிறார்.
தமிழக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு இருப்பது போன்ற எண்ணம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் இல்லை. ஆட்சியைக் கலைக்க திமுகவைப் போல், டிடிவி.தினகரனும் முயற்சிக்கிறார். அதிமுக ஆட்சியை கலைக்க அக்கட்சி எம்எல்ஏக்களே முயற்சிப்பது வெட்கக்கேடானது. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதை மக்களோ, தொண்டர்களோ ஏற்கமாட்டார்கள். எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.