பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூட்டணி ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது….
பாராளுமன்றத் தேர்தலுக்கு தேசிய முகம் தேவைப்படுகிறது. ஆகையால் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணி குறித்து தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
கொள்கை, கோட்பாடு, இலட்சியம் இவைகள் எல்லாம் இல்லாத கட்சி தான் தி.மு.க., இந்திராகாந்தியைக் கடுமையாக எதிர்த்தனர், அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். பின்பு அவருடன் கூட்டணி வைத்துக்கொண்டு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என கூறினர்.
தமிழ்நாட்டை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்றவே அ.தி.மு.க. தலைமை பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துள்ளது. மிக விரைவில் இன்னும் சில கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும். எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. இந்தக் கூட்டணி நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களுக்கு யார் நன்மை செய்பவர்களோ அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை தமிழகத்திற்கு பெற்றுத்தருவோம் எனக் கூறியுள்ளார்.
காவிரி நீர் பிரச்சினை குறித்துபாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்பி.க்கள் கடுமையாகப் பேசி 2 அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். மக்கள் பிரச்சினைகளுக்கு அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்.
ஜெயலலிதாவும் அரசியல் களத்தில் பலமுறை கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்துள்ளார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தனியாக நின்று தேர்தலை சந்தித்தார். தேர்தல் என வந்துவிட்டால் சமரசத்திற்கும் ஆட்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.