ஸ்டாலின் பேச்சு வைகோ கண்ணீர் – திருச்சியில் பரபரப்பு

ம.தி.மு.க. சார்பில் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் ம.தி.மு.க. உயர்நிலைக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் வீரபாண்டியன் எழுதிய ‘தமிழின் தொன்மையும் சீர்மையும்-கலைஞர் உரை’ என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (பிப்ரவரி 24,2019) இரவு நடந்தது.

விழாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரபாண்டியன் எழுதிய நூலை வெளியிட முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடைசியாகச் சிறப்புரை ஆற்றிய ஸ்டாலின், “இந்த விழாவில் கலந்துகொள்வதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். ம.தி.மு.க., சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுக்கு அருகில் ஸ்டாலினா? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். இல்லை இல்லை பொறாமை. திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் ஒரு சிலருக்கு எரிச்சல். கழக உடன் பிறப்புகளால் தளபதி என அழைக்கப்பட்டவன் நான், தலைவர் கலைஞரால் போர்வாள் என்றிழைக்கப்பட்டவர் வைகோ. இந்த விழாவின் அழைப்பிதழில், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எனும் பாவேந்தர் வரிகளை அண்ணன் வைகோ பயன்படுத்தி உள்ளார். உண்மைதான் இந்த தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காப்பதற்காக இணைந்துள்ளோம்.

கலைஞர் வயதின் முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் ஓரிரு ஆண்டுகள் ஓய்வெடுத்த போது, கலைஞரைச் சந்திக்க வைகோ நேரம் கேட்டார். வைகோ வந்து கலைஞரைப் பார்த்தார். அப்போது வைகோவைப் பார்த்து கலைஞர் புன்முறுவல் செய்தார். எத்தனை ஆண்டு கால நட்பு அது. கலைஞருக்கு தொண்டர்களின் தொண்டராக இருந்தவர் தான் வைகோ. கலைஞரின் கையை அழுது கொண்டே பிடித்து வைகோ தடுமாறினார். கலைஞரும், வைகோ கையைப் பிடித்துக்கொண்டார்.

அந்த சோக நிலையிலும் கலைஞரிடம், ‘அண்ணா உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அதேபோல ஸ்டாலினுக்கும் என் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பேன்’ என்று கூறினார். ஒரு முறை அல்ல பல முறை கூறினார். நீங்கள் (வைகோ) எனக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, நானும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். (இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறிய போது குரல் தழு தழுத்தது, கண்களில் நீர் தழும்பியது. அதே நேரத்தில் மேடையில் அமர்ந்திருந்த வைகோவும் கண்ணீர் விட்டு அழுதார். கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தபோதும் அழுது கொண்டே இருந்தார்.)

கடந்த 30 வருடங்களாகத் தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு எனப் பல போராட்டங்களை முன்னின்று நடத்திய வைகோவின் போராட்டங்களுக்கு துணை நிற்போம். தலைவர் கலைஞர் சொன்ன வார்த்தைகளை வைகோ மீறியதே இல்லை. குறிப்பாக பொடாவில் வைகோ இருந்தபோது வைகோவின் கைகளைப் பிடித்துக் கலங்கியபடி பிணையில் வெளியே வா, உடலை வருத்திக்கொள்ளாதே எனக் கூறினார். அதனையடுத்துதான் வைகோ சிறையில் இருந்து வெளியே வந்தார். வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தபோது கூட்டணி பேச நான் அவரைச் சந்தித்தேன். இப்போதும் கூட்டணி பத்திரத்தில் சீக்கிரம் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்துள்ளேன்.

பொடா சிறையிலிருந்து ஜாமீனில் வந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம். அதேபோல் வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் 40-க்கும் 40 தொகுதிகளைப் பெற புயல்வேகப் பயணத்துக்கு வைகோ தயாராகி விட்டார். மத பயங்கரவாதத்தை முறியடிக்கத் தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, திராவிட இயக்கங்களின் அடிப்படை இலட்சியங்களான சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், பகுத்தறிவு மதசார்பின்மை ஆகிய கொள்கைகளைக் காப்பாற்றுவதற்காக இந்தப் பயணம். இந்தக் கொள்கைகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளால் பல ஆபத்துகள் தொடந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆபத்துகளை எதிர்த்து திராவிட இயக்கங்களின் தளபதிகளும், போர்வாளும் ஒன்று சேர்வோம். வென்று காட்டுவோம் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response