தமிழக சட்டமன்றத்தில் ஜூலை 25 ஆம் நாள் நடந்த நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் (மறைந்த முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான பழனிவேல் ராஜனின் மகன்) ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர், தனி நபர் வருமானம் பற்றி சில கருத்துக்களை முன்வைத்தார், தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழக அரசு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலை மந்தநிலைக்கு வந்திருக்கிறது. மாநில அரசின் வரவுக்கு ஏற்ப செலவழிக்க முடியாமல் கூடுதலாக செலவழிக்கப்படுவதால் இந்த நிலை உருவாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதை சீரமைக்க புதிய பாலங்கள் கட்ட வேண்டியது அவசியம்” என்று பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் இதுவரை ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவார்.
நடுவில் ஒரு உறுப்பினர் தெலுங்கில் பேசிய நிகழ்வும் நடந்தது. இப்போது , திமுக உறுப்பினர் ஒருவரே ஆங்கிலத்தில் பேசியதும் அதற்கு அதிமுக உறுப்பினர் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் நிகழ்வும் நடந்திருக்கிறது.
நீதிமன்றங்கள், கோவில்கள் உட்பட எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் இதுவரை இல்லாத மாதிரி சட்டமன்றத்திலேயே ஆங்கிலத்தில் பேசி தவறான முன்னுதாரணத்தை திமுக உறுப்பினர் ஏற்படுத்திவிட்டார், இது இனியும் தொடரக்கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் சொல்கின்றனர்.
இது தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் கூறியதாவது….
திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள், நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்கள் அதன் மூலம் தமிழைக் காப்பாற்றியவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற கருணாநிதியின் கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
கருணாநிதியின் வாரிசுகள் கொள்கை கோட்பாடுகளை மறந்து திசைமாறிய பறவைகளாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தான் வந்த வழியைத் தன் வாரிசுகளுக்குச் சொல்ல மறந்துவிட்டாரா கருணாநிதி, இல்லையில்லை, தமிழ் என்று பேசுவதும் இனம் என்று பேசுவதும் அவருடைய பொழுதுபோக்குகளில் ஒன்று என்பதை இதன் மூலம் நிருபித்திருக்கிறார்கள்
என்று சொல்கிறார்.
தமிழ் மொழி மீதும் இனத்தின் திமுக தலைவருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தனியாக அழைத்து அவரைக் கண்டிக்கவேண்டும், இனிமேல் அவர் தமிழில்தான் பேசவேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்து.<