உத்தரகாண்ட் பேரழிவைத் தொடர்ந்து மும்பை மூழ்கும் – ஓர் அதிர்ச்சி அறிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர் குறித்து பேராசிரியர் த.செயராமன்(தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு) வெளீயிட்டுள்ள அறிக்கை….

உத்தரகாண்ட் மாநிலத்தில், நந்தாதேவி பனிப்பாறை உருகி, உடைந்து வீழ்ந்து, தவுளிகங்கா ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 190 பேரைக் காணவில்லை. அமைக்கப்பட்டுவரும் தபோவன் விஷ்ணு காட் நீர்மின் திட்டம் மற்றும் ரிஷி கங்கா தனியார் மின் திட்டத்தில் பணியாற்றியவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர்.

தபோவன் தளத்தில் 1900 மீட்டர் நீள சுரங்கப்பாதையில் பணியாளர்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காப்பாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அச்சமூட்டும் வேகத்தில் நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கங்கை ஆற்றின் கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள், நீர்மின் திட்ட கட்டமைப்புகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

ரிஷிகங்கா மற்றும் ரெய்னி நீர்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த 153 தொழிலாளர்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தபோவன் சுரங்கத்தில் 34 பேர் சிக்கி உள்ளதாகக் கருதுகிறார்கள்.

நந்தாதேவி பனிப்பாறை உடைந்ததற்கான காரணம் குறித்து டி.ஆர்.டி.ஒ.இ. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்கிறார்கள். புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் இந்தப் பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்பதே ஆய்வாளர்களின் கணிப்பும், கருத்தும் ஆகும்.

நவீன தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மிதமிஞ்சிய நிலக்கரி, மீத்தேன்- ஹைட்ரோ கார்பன்கள் ஆகியவற்றின் பயன்பாட்டால், அளவிட முடியாத அளவிற்கு கரியமிலவாயு, பசுங்குடில் வாயுக்கள் ஆகியவை வெளியாகின்றன. இவை காற்றில் அதிகரித்து, சூரிய வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால் பூமி மிதமிஞ்சி வெப்பமடைகிறது.

இவ்வாறு, நவீன தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பசுங்குடில் வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன. புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. உலகின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் காத்திருக்கிறது.

புவி வெப்பமயமாதலால் பெருவெள்ளம், சூறாவளி, வறட்சி, நோய்கள், கடல்வள அழிவு, பனிப்பாறை உருகுதல், கால நிலை மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன.

உலகின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்பதிலிருந்து, ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதை 16 டிகிரி ஆகிவிடாமல் தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் இருக்கின்றன, 15.5 டிகிரிக்குள் புவிவெப்பத்தைக் கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள்.

இதைக் கட்டுப்படுத்த எண்ணெய் – எரிவாயு, நிலக்கரிப் பயன்பாட்டை குறைப்பதும், கைவிடுவதும் மட்டுமே ஒரே வழி என்ற முடிவுக்கு உலக நாடுகள் வந்துள்ளன.

2015 ஆம் ஆண்டு பாரிசில் 21 ஆவது உடந்தையாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்,எண்ணெய் – எரிவாயு, நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைப்பது பற்றிய உடன்பாட்டுக்கு வந்தனர். இதை ஒப்புக்காண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.

2030 இல் இங்கிலாந்தில் ஒரு பேருந்து கூட பெட்ரோலியத்தைக் கொண்டு இயங்காது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துவிட்டார். 2030 க்குள் பெரும்பான்மையான நாடுகள் பெட்ரோலியப் பொருள் பயன்பாட்டைக் கை விடுகின்றன.

ஏனெனில் ஐ.பி.சி.சி அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் கடல் நீர்மட்டம் 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது; 30 ஆண்டுகளில் 9 மில்லி மீட்டரும், 100 ஆண்டுகளில் 20 மில்லி மீட்டரும் உயரும். இது மேலும் அதிகமாகும். இதனால் பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் காத்திருக்கிறது.

கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிகா பனிப்பாறைகள் இப்போது வேகமாக உருகி வருகின்றன. தற்போதுள்ள நிலவரப்படி, பனிப்பாறைகள் உருகுவதால் 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறும் என்று தெரிகிறது.

மாலத்தீவு வெளிநாட்டில் இடம் வாங்கி தன் மக்களை அங்கே குடியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மும்பை பகுதி கடலுக்குள் மூழ்கும். தமிழ்நாட்டில் கடலோர கிராமங்கள் எண்ணூர் முதல் பழைய மகாபலிபுரம் சாலை பகுதிவரை பாதிப்புக்குள்ளாகும். இலட்சக்கணக்கான வீடுகள் கடலில் மூழ்கும். தமிழகத்தில் 3029.33 சதுர கிலோமீட்டர் பரப்பு கடலில் மூழ்கும் என்று கருதுவது குறைந்த மதிப்பீடு.

காவிரிப்படுகை கடல் மட்டத்தை விட அதிக உயரத்தில் இல்லை. ஆகவே காவிரிப்படுகையில் கடலோரப் பகுதிகள் எல்லாம் கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள்தான் ஹைட்ரோகார்பன் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றன. அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் படிம எரிபொருள் தொழிலதிபரை தன் வெளியுறவுச் செயலராக நியமித்துக் கொண்டார். புவி வெப்பமயமாதலைக் கிண்டல் செய்யக் கூடிய ரிக்பெரி என்பவரே ஆற்றல் துறை செயலாளர்.

2015இல், படிம எரிபொருளைக் குறைப்பதற்கு ஒப்புக்கொண்ட 195 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவின் செயல்பாடுகள் அழிவை விரைவு படுத்துவதாக இருக்கிறது.

உலக நாடுகள் எல்லாம் இருக்கும் எண்ணெய்க் கிணறுகளை மூடி வரும் நிலையில், இந்தியா புதிய நிலப்பரப்புகளில் ஏராளமான எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஏலம் விடுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் காவிரிப்படுகைப் பகுதியில் சுமார் 11,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நிலப்பரப்பிலும், கடற்பரப்பிலும் கிணறுகள் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ளது. 2018 அக்டோபரில் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரை 5034 சதுர கிலோமீட்டர் பரப்பில் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கும், 2019ஆம் ஆண்டு 474 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கும், 2019- இல் நாகை மாவட்டம் முதல் ராமநாதபுரம் வரை 1,763 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்துக்கும், ஐந்தாவது சுற்று ஏலத்தில் ஆழ்கடல் பகுதியில் புதுச்சேரி முதல் காரைக்கால் வரை 4064 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சிக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இது அதிர்ச்சி தரத்தக்க ஒன்றாகும்.

கொரோனா முடக்கத்தில் கிடக்கும் இந்தியாவைத் தூக்கி நிறுத்தப் போகிறோம் என்று நரேந்திர மோடி அறிவித்து, அன்றாடம் மூட்டை மூட்டையாகத் திட்டங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வந்தார்.

16 மே 2020 அன்று, தன்னுடைய நாலாம் கட்டத் திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில் இஸ்ரோ உள்ளிட்டு, மீத்தேன்- நிலக்கரி, கனிமவள ச்சுரங்கங்கள் உள்ளிட்டு, அனைத்தையும் தனியார் முதலீட்டுக்குக் கதவைத் திறந்து வைப்பதாக அறிவித்தார். இனி தனியார் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்கலாம் என்றும், உடனடியாக 50 நிலக்கரி தொகுப்புகள் ஏலம் விடப்படும் என்றும் அறிவித்தார். நிலக்கரியை எடுத்துக் கொண்டு செல்ல 50,000 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றார். 500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலத்திற்குக் கொண்டுவரப்படும் என்றார். சுரங்கம் அமைக்க அதுவரையிலிருந்த கெடுபிடிகள் குறைக்கப்பட்டன. இனி நிலக்கரியையும் பாக்சைட்டையும் ஒன்றாகவே ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். பெரும் நிலப்பரப்பில் அமைய இருக்கும் இந்த நிலக்கரி வயல் பகுதியில் வாழும் மக்களை என்ன செய்வதாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால், இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது,புவி வெப்பமயமாதல் மேலும் விரைவுபடுத்தப்படும். இதனால் பனிப்பாறைகள் விரைவாக உருகும். கடல் மட்டம் விரைந்து உயரும். பல நாடுகளையும் நகரங்களையும் கடல் மூழ்கடிக்கும்.

இந்திய அரசுக்கு சுற்றுச்சூழல் பற்றிய அல்லது புவிவெப்பமயமாதல் பற்றிய எவ்வித கவலையோ அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (Environmental Impact Assessment) தயாரிக்கா மலே, மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தாமலே, நாசகாரத் திட்டங்களை நடைமுறைப் படுத்தலாம் என்று மோடி அரசு அறிவித்து விட்டது.

அருணாச்சலப் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கில் இரண்டு அணைகளும், இரண்டு சுரங்கங்களும் எவ்வித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்படுகின்றன.

அஸ்ஸாம் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படுகிறது. எந்த அனுமதியும் பெறப்படவில்லை.

கோவா பகவான் மகாவீர் சரணாலயத்தில் நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

குஜராத்தின் கிர் தேசிய பூங்கா வில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்கப்படுகிறது.

இப்படி எவ்விதத் தடையும் இல்லாமல், எண்ணெய் எரிவாயு, நிலக்கரி, பிற கனிமங்கள் எடுக்க அனுமதிக்கும் வகையில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.

விதிமுறைகளை வலியுறுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (நோட்டிபிகேஷன்) – 2006 மாற்றி, திட்டங்களைத் தாராளமாக அனுமதிக்கின்ற 2020- அறிவிக்கையை மோடி அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இவ்வளவு தூரம் இயற்கையின் மீது தாக்குதல் தொடுத்தால், அதன் பலன்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

இன்று ஏற்பட்டிருக்கக் கூடிய உத்தரகாண்ட் பனிப்பாறை உடைந்து, உருகி, பேராபத்தை விளைவிக்கும் இந்த நிகழ்வுக்கு, இந்திய அரசு உள்ளிட்டு நாசகாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

பல்வேறு நாசகாரத் திட்டங்களால் இந்தியத் துணைக் கண்டத்தையே அழித்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, உலகத்தையும் விட்டு வைப்பதாக இல்லை. மோடி வகையறாக்கள் தங்கள் நாசகாரச் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response