ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவும் தனது ட்விட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ரிஹானா, கிரேட்டா உள்ளிட்டோர் தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவிட்டதையடுத்து, இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு உலக பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வழிமுறைகள் கொண்ட ஒரு தொகுப்பை கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிரிவினையை தூண்டும் வகையிலான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் பதிவை கிரேட்டா சிறிது நேரத்தில் நீக்கினார்.
இதையடுத்து கிரேட்டா தன்பெர்க் மீது தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கிரேட்டா மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு எனது ஆதரவு தொடரும். வெறுப்பு, அச்சுறுத்தல்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் அதனை ஒருபோதும் மாற்றாது” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தில்லி காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரும் இடம் பெறவில்லை என்றும், கிரேட்டாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குறிய வழிகாட்டுதல் தொகுப்பை உருவாக்கியவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் தில்லி காவல்துறை சிறப்பு அணையர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.