அதிமுக பாமக கூட்டணி – நேற்றிரவு நடந்த சந்திப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பரப்புரை உத்தி உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணியில் பாசக மட்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கூட்டணி உறுதி என்றாலும் தொகுதிப் பங்கீடு நிறைவு பெறவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிகத் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பாசக 60 தொகுதிகளைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பாசகவுக்கு எவ்வளவு தொகுதிகளைக் கொடுக்கிறீர்களோ அவ்வளவு தொகுதிகளை எங்களுக்கும் தர வேண்டும் என்று பாமக நிபந்தனை விதித்துள்ளது.அதுமட்டுமின்றி வடமாவட்டங்களில் எங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகம் உள்ளதால், தங்களுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் தேர்தலுக்கு சில உதவிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிமுக தரப்பில் இருந்து உறுதியான எந்த தகவல்களும் கொடுக்கப்படவில்லை.

இதனால், அதிமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? இல்லையா? என மருத்துவர் இராமதாசு இதுவரை பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி நேற்று மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில், சத்திரிய குணத்தை வெளிப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால், நேற்றிரவு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசை அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது? என்கிற தகவல் விரைவில் வெளியாகும்.

Leave a Response