சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் நுரையீரலில் சளி கட்டி இருப்பது தெரியவந்தது. இதனிடையில் சசிகலாவுக்கு ஆர்டிபிசிஆர் கோவிட்-19 பரிசோதனை நடத்தியதில் வந்த முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நிமோனியா காய்ச்சலும் இருந்ததால் விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
சசிகலா உடல் நிலை ஆபத்தான நிலையில் இல்லை. அவர் சீராக உள்ளார். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 67, இரத்த அழுத்தம் 120/60 சுவாசம் நிமிடத்துக்கு 20-24, ஆக்ஸிஜன் அளவு 98 சதவீதம் இருக்கிறது. இருப்பினும் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ்கிருஷ்ணா, டீன் ஜெயந்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் சசிகலாவை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்குரைஞர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் டீன் ஆகியோரிடம் நேற்று காலை முதல் வலியுறுத்தினர். வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய விரும்பினாலும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்று வந்தால மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதாக பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தெரிவித்து விட்டார்.
இதற்கிடையே சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசி, சிறையில் அவர்களுக்கு உதவியாக இருந்த இரு பெண் காவலர்கள் உள்பட சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த 8 பேருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையும் பின் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இளவரசிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.இளவரசிக்கு முன்னெச்சரிக்ைகயாக சிடி ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்யும்படி அவரது மகன் விவேக், சிறைக் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தினார். இளவரசிக்கு சிடி ஸ்கேன் எடுப்பது தொடர்பாக எந்த முடிவும் சிறை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.