சசிகலாவுக்கு திடீர் கொரோனா – மனித உரிமை ஆணையத்தில் புகார்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று முன் தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்,அவர் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று கூறினர்.

சசிகலாவை அவரது உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், ஜெயராமன், மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் சி.டி.ஸ்கேன் எடுத்து பரிசோதிக்குமாறு வலியுறுத்தினர்.

பின்னர் பவுரிங் மருத்துவமனையின் டீன் மனோஜ்குமார் கூறுகையில், சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் குறைந்துள்ளது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவு, ஆக்ஸிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்தும் சீராக உள்ளது. சுவாசப் பிரச்சினை இருப்பதால் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். அங்கு 3 நாட்கள் வரை சசிகலா இருக்க வாய்ப்பு இருக்கிறது”என்றார்.

இதையடுத்து நேற்று பிற்பகலில் சசிகலா பலத்த பாதுகாப்புடன் விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விக்டோரியா அரசு மருத்துவமனைக்குஜ் கொண்டு செல்லப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டது. அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நுரையீரலில் இலேசான தொற்று இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும் சசிகலாவுக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சசிகலாவின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர், சசிகலாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அவரை கேரளா அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில‌ மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Response