நேற்று பிற்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றடைந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர்.
தில்லி விமான நிலையம் சென்றடைந்த முதல்வருக்கு கே.பி.முனுசாமி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் சென்றார்.
மாலை 7.15 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயணத் திட்டத்தின் முதலாவதாக நேற்று மாலை 7.30 மணிக்கு தில்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து டிவிட்டரில், இன்று (18.01.2021) புதுடில்லியில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன் என்று மட்டும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஆனாலும் அச்சந்திப்பில் நடந்தது என்ன என்பது பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி….
சுமார் 75 நிமிடம் நடந்த இந்த ஆலோசனையின் போது தமிழக சட்டம் ஒழுங்கு, மாநிலத்தின் அரசியல் களம் நிலவரம் மற்றும் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி உடன்பாடு, தொகுதிப் பங்கீடு, சசிகலா விடுதலை ஆகியவை உட்பட ஒட்டு மொத்த மாநிலத்தின் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தெரியவருகிறது.
அதில் பாசவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். சிறிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைத்துள்ளன. அந்தக் கட்சிகளுக்கு நாங்கள் தொகுதி ஒதுக்கிக் கொள்கிறோம் என்று அமித் ஷா கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 34 தொகுதிகளுக்கு மேல் விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவரின் பேச்சில் நேற்று உடன்பாடு ஏற்படவில்லை என்றும் இதனால் மீண்டும் பேசத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இதுவரை கூட்டணியில் உள்ள பாசக தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் தில்லி மேலிடம் அறிவிக்கும் என்று கூறி வருகின்றனர். இதனால் தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி எடப்பாடி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அமைதியாக இருக்கும் பாசக கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்திவிடுமோ என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அமித்ஷாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தொகுதி ஒதுக்கீடு முடியாததால், அது குறித்த எந்த உறுதிமொழியும் அமித்ஷா வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.