விசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா?

2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது.

இந்த ஒரு நபர் ஆணையம் ஏற்கெனவே 23 கட்ட விசாரணையை முடித்துள்ளது.துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தகவல் அறிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், தீயணைப்புத் துறையினர், காவலர் குடியிருப்புகளில் வசிப்போர், பொதுமக்கள் என இதுவரை மொத்தம் 586 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி நேரில் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் 24 ஆம் கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த விசாரணை வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆஜராக மொத்தம் 56 பேருக்குச் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள், தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் அப்போதைய டீன் உள்ளிட்டோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்த விசாரணையில் இன்று (சனவரி – 19) நடிகர் ரஜினி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை ரஜினி பெற்றுள்ளார்.

ஆனால், அவர் நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா? என்ற கேள்வி இருந்தது.

ரஜினி தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நேரில் ஆஜராகமாட்டார். தனது வழக்கறிஞர் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி நேரில் சென்றால்தான் ஆச்சரியம்.

Leave a Response