வாடகை பாக்கி விவகாரம் – ரஜினி மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஸ்ரம் பள்ளியை வாடகைக் கட்டிடத்தில் நடத்தி வருகிறார்.

இதன் உரிமையாளர் வெங்கடேஷ் வரலு மற்றும் பூர்ணச்சந்திரராவ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளிக்கான வாடகைத் தொகையை சரிவரத் தராமல் ரூ.11 கோடி வரை நிலுவையில் உள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் தலையிட்ட நீதிமன்றம் ரூ.11 கோடியை உடனடியாகத் தரமுடியாததால், உடனடியாக ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 10 இலட்சம் தரும்படியும் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் வெங்கடேஷ்வரலு கையெழுத்துப் போட்ட நிலையில் லதா ரஜினிகாந்த் ஆவணத்தில் கையெழுத்துப் போடாமலும், வழக்கம் போல பணத்தைத் தராமலும் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிமன்றம் இடத்தைக் காலி செய்ய அறிவுறுத்தியது. கொரோனா காரணமாக உரிய நேரத்தில் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய முடியவில்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சார்ந்த செயலாளரான லதாவின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் அவகாசம் தந்துள்ளது.

ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021 22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 30 க்குப் பின் காலி செய்யாவிடில் ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று சொல்லி அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவருடைய மனைவியோ, வாடகை தராமல் இழுத்தடித்து பள்ளிக் கட்டிடத்தைக் காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார். இது ரஜினிகாந்துக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது என்கிறார்கள்.

Leave a Response