ரஜினியின் கொள்கை என்ன? – கமல் கேள்வி

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுரையில் கடந்த 13 ஆம் தேதி தேர்தல் பரப்புரை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

அவர், நேற்று கோவில்பட்டி வந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது…..

எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகர் வேண்டுமென்றாலும் இருக்கலாம். அவர் திமுகவில் இருந்தபோது அவரது பெயர் மக்கள் திலகம் தான். அதிமுக தொடங்கிய பின்னரும் அவரை அப்படியே தான் அழைத்தனர். இங்குள்ள 7.5 கோடி மக்களுக்கு அவர் சொந்தம். அதில் நானும் ஒருவன்.

நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள். எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது. அதனால் தான் தேடிச் சென்று பார்க்கிறோம். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் பதவிக்கு வருவதில் அர்த்தமில்லை. தேர்ந்தெடுப்பதில் நமக்கு தான் புத்திக் கூர்மை இருக்க வேண்டும்.

அரசியலுக்கு நான் ஏன் வந்தேன் என்பதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டேன். கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களது கொள்கை என்ன என்பதை இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை. அவர் ஒற்றை வார்த்தையில் சொல்வதை நாம் முழுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சொன்ன பிறகு ஒத்துவந்தால் நாங்கள் பேசுவோம்.

நட்பு என்பது எங்களுக்கு எளிதான ஒன்று. நாங்கள் இருவருமே ஒரு போன் போட்டால் கிடைக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து விட்டு ஒத்துழைப்போம் என ஏற்கெனவே கூறியுள்ளேன் என்றார்.

Leave a Response