தேர்தல் சின்னம் ஒதுக்கீடு – டிடிவி.தினகரன் மகிழ்ச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக 9 கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மக்களவைத் தேர்தலில் போட்டிட்ட ‘டார்ச் லைட்’ சின்னத்தை சட்டமன்றத் தேர்தலிலும் பொதுவான சின்னமாக ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மட்டும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சின்னம் அந்த கட்சிக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிட பொதுவான சின்னமாக ‘பிரஷர் குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு பொதுவான சின்னமாக ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ‘மின்கம்பம்’ சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் சின்னம் கிடைத்தது தொடர்பாகப் பதிவிட்டுள்ள டிடிவி.தினகரன், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று கூறியுள்ளார்.

Leave a Response