33 ஆண்டுகள் பேச்சுக்கு 33 வினாடிகளில் முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று அவருடைய படங்கள் வெளியாகும் நேரங்களில் சொல்லப்படும்.ஆனால், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினி காந்த், புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றார். இந்த அறிவிப்பால் அவரது இரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், ரஜினி கட்சி தொடங்குவது தாமதமாகி வந்தது.

இதற்கிடையே, ரஜினியின் உடல் நிலையைக் குறிப்பிட்டு, அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதுபற்றி விளக்கம் அளித்த ரஜினி, ‘அது எனது அறிக்கை இல்லை. ஆனால், எனது உடல்நிலை குறித்து அதில் கூறியிருப்பது உண்மைதான். எனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ரஜினி நேற்று காலை சந்தித்தார். இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 38 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களிடம் ரஜினி பேசியதாவது….

2016 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தினமும் 16 மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றைய கொரோனா சூழலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு என் உடல்நிலை இல்லை. மக்களை நேரடியாகச் சந்திக்காமல் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது. மற்ற அரசியல் கட்சிகளோடு சேர்ந்து 15, 20 சீட் வாங்கிக் கொண்டு கூட்டணி அரசியல் என்று இறங்குவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, 2017 ஆம் ஆண்டு டிசம்பரில், ‘அரசியலுக்கு வருகிறேன்’ என்று சொன்னவன் நான். அப்போது இருந்த அரசியல் வெற்றிடம் என்னை முழுமூச்சாக இறங்கி வேலை பார்க்கத் தூண்டியது. அதற்கான வேலைகளில் இறங்கலாம் என இருந்தபோது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றிலும் சூழலை மாற்றிவிட்டது.

தேர்தலை எதிர்கொள்ளும் முன்பு நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கும் சென்று வழிபட்டுவிட்டு தொடங்க வேண்டும் என திட்டமிட்டு வைத்திருந்தேன். இன்றோ, எல்லாமும் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. ‘இந்தச் சூழலில் இவர் வெளியே எங்கும் செல்லக் கூடாது’ என்று என் குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். என் உயிரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்களை எல்லாம் களத்தில் இறக்கிவிட்டு, அதன் பிறகு எனக்கு ஏதாவது என்றால் நீங்கள் எல்லோரும் நட்டாற்றில் நிற்பீர்களே, அதுதான் என் கவலையாக உள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் முஸ்லிம், தலித் உள்ளிட்ட பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது பாஜக போன்ற கட்சிகளோடு நான் எப்படி கூட்டணி வைக்க முடியும், அதற்கு வாய்ப்பே இல்லை. நம் முதுகின் மீது அடுத்தவர்கள் சவாரி செய்வதை நான் எப்போதும் விரும்புபவன் அல்ல. கொரோனா முற்றிலும் ஒழிந்தால் அதன்பிறகு பார்க்கலாம். அதுவரைக்கும் அரசியலில் தீவிரம் செலுத்தப் போவதில்லை. ரஜினி மக்கள் மன்றம் எப்போதும்போல இயங்கும். அதன்மூலம் நற்பணிகள் அனைத்தும் தொடரும்.

இனி சினிமாவிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால்தான் இன்னும் படப்பிடிப்புக்குக் கிளம்பாமல் உள்ளேன்.

எம்ஜிஆர் படுத்துக்கொண்டே ஜெயித்தார் என்றால் அது அன்றைக்கு திமுக செய்த தவறான பிரச்சாரம். அவர்கள், எம்ஜிஆர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். ஆனால், அதிமுகவினரோ எம்ஜிஆரின் வீடியோவை வெளியிட்டு ஓட்டு கேட்டனர். அது அதிமுகவுக்கு பெரும் பலமாக அமைந்தது.

‘அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன் என்று கூறிய ரஜினி, கடைசியில் வரவில்லையே’ என்று பலரும் கிண்டல் செய்யலாம். அதை யாரும் ஈகோவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த விமர்சனத்தையும் பெரிதாக பொருட்படுத்த வேண்டாம். நான் எப்போதுமே வெளிப்படையாக, எதார்த்தமாக, நேர்மையாக, உண்மையாக, நடுத்தரமாக இருக்கிறேன். இனி வரும் காலங்களிலும் அப்படியே இருப்பேன்.

நடிக்க வரும் முன்பு, திரைப்படக் கல்லூரிக்குச் சரியாகப் போக முடியவில்லை எனக் கருதி, ஒரு ஆண்டுடன் நின்றுவிட நினைத்தேன். உடன் இருந்த நண்பன் ஒருவன், ‘கல்லூரியை இடையில் நிறுத்தக் கூடாது’ என என்னைத் தடுத்தான். அதனால்தான் அடுத்த சில மாதங்கள் தொடர்ந்தேன். அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாலச்சந்தர் கண்களில் பட்டேன். அப்படித்தான் சினிமாவுக்கு வந்தேன். இன்றைக்கு உங்கள் அன்பும் எனக்குக் கிடைத்தது. இப்படி என்னைச் சுற்றி நடக்கும் எல்லாமும் கடவுளால் நடப்பதாகவே கருதுகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இப்படி நடக்க வேண்டும் என கடவுள் நினைப்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ஆகவே, எதிலும் நிதானமாக யோசித்து இறங்குங்கள். இப்போதைய சூழலில் அரசியல் நுழைவு என்பது சரியான முடிவாகப் படவில்லை. அதனால்தான் உங்கள் அனைவரையும் அழைத்துப் பேசுவோம் என வரவழைத்தேன். இதையே ஊடகம் வழியே மக்களிடமும் தெரிவித்து விடுகிறேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

கூட்டம் முடிந்தபின் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லம் திரும்பி செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதற்காக,நீண்டநேரம் காத்திருந்து ஒலிபெருக்கிகளை ஒருங்கிணைத்து, ஒளிப்பதிவுக் கருவிகளை நிலைநிறுத்தி காத்திருந்தார்கள் ஊடகத்தினர்.

ரஜினி மக்கள் மன்ற (ஆர்.எம்.எம்.) நிறுவனர்-தலைவர் ரஜினிகாந்த் அள்ளமுடியாமல் செய்திகளைக் கொட்டுவார் என்று பேராவலுடன் காத்திருந்தார்கள்.

“சனவரியில் கட்சி தொடங்கத் திட்டம்” என்றும் அதுபோன்று வேறுசில சூட்டைக் கிளப்பும் செய்திகளையும் தரபோகிறார் என்று பரபரப்புடன் காத்திருந்தார்கள்.

ரஜினி வந்தார், ஆரம்பித்துவிட்டார். முகக் கவசத்தை வேறு விலக்கியவாறு பேசுகிறார். எப்படியும் அரை மணி நேரமாவது போகும் என்று மேலும் ஆவல் எகிற “சலசலப்பு” அடங்காமல் காத்திருந்தார்கள்.

அமைதியாக வந்த ரஜினி 33 வினாடிகளில் (Repeat 33 seconds) அவர் அரசியலுக்கு வருவது குறித்த விரைந்த முடிவு பற்றிய இன்றைய முடிவைச் சொல்லிவிட்டு, வணக்கம் போட்டவாறே வீட்டுக்குள் போய்விட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள்கூட இருப்போம் என்று கூறினார்கள். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊடகத்தினர் உள்வாங்கி நிலை கொள்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

சுமார் 33 ஆண்டுகளாக இப்போது அப்போது என்று சொல்லப்பட்ட செய்திக்கு 33 வினாடிகளில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response