அமெரிக்காவை வென்ற தென்கொரிய தொழிலதிபர் சாம்சங் லீகுன்ஹீ மறைந்தார்

உலக அளவில் ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட மின் பொருட்களுக்கு முன்னணியாகக் கருதப்படும் சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார். அவருக்கு வயது 78.

தென்கொரியாவில் தோன்றி உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மருத்துவமனையில் உயிரிழந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உயிர் பிரிந்த போது அவரது மகனும், தற்போதைய நிறுவனத்தின் தலைவருமான ஜெ லி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

மீன் மற்றும் பழ ஏற்றுமதி தொழிலை சாம்சங் என்ற பெயரில் தொடங்கி நடத்தி வந்த தந்தையின் மறைவுக்கு பிறகு 1987 ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற லீ குன் ஹீ தொலைக்காட்சி தயாரிப்பில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

அவரது உழைப்பில் தொலைக்காட்சி மட்டுமின்றி மிகப்பெரிய ஸ்மார்ட் போன்கள், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக சாம்சங் உயர்ந்தது. சாம்சங் நிறுவனத்தில் மெமரி சிப் ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது.

நிறுவனத்தின் சொத்து மதிப்பு 30 இலட்சம் கோடி ரூபாய். தென் கொரியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லீ குன் ஹீ-ன் சொத்து மட்டும் 1.50 இலட்சம் கோடி ரூபாய்.

உலகின் முன்னணி நிறுவனமாக சாம்சங்கை வளர்த்த போதிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் லீ குன் ஹீ ஆளானார். 1996 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டு அதிபருக்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். 2014 ஆம் ஆண்டு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லீ குன் ஹீவீடு திரும்பாமலே காலமானார்.

அமெரிக்கா, ஜப்பான் போட்டிகளைச் சமாளித்து உலகின் முதல் தர நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை மாற்றிய பெருமை லீ குன் ஹீ-க்கு உண்டு.

Leave a Response