ஐபிஎல் முதல் போட்டி – சென்னை வெற்றி ஆனாலும் இரசிகர்கள் வருத்தம்

ஐபிஎல்

13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துத் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

அபுதாபியில் நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணித்தலைவர் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அமர்க்களமாக தொடங்கிய ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 ரன்களில் (10 பந்து) பியுஷ் சாவ்லாவின் சுழலில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய டி காக் 33 ரன்களில் (20 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் சவுரப் திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து மும்பை அணியின் ரன்வேகத்தை அதிகப்படுத்தினர். ஜடேஜாவின் பந்து வீச்சில் பாண்ட்யா இரண்டு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டார். அவரது இன்னொரு ஓவரில் சிக்சருக்கு முயற்சித்து எல்லைக்கோடு அருகே பாண்ட்யா (14 ரன்) சிக்கினார். இதற்கிடையே சவுரப் திவாரி 42 ரன்கள் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் நடையை கட்டினார். பொல்லார்ட்(18 ரன்), குருணல் பாண்ட்யா (3 ரன்) சோபிக்கவில்லை.

180 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்த்த வேளையில் கடைசி கட்டத்தில் சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் அந்த அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சென்னை தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டும், சாவ்லா, சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன் (4 ரன்) டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சிலும், முரளிவிஜய் (1 ரன்) பேட்டின்சன் பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய அம்பத்தி ராயுடு அதன் பிறகு அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து அசத்தியதுடன் ஐ.பி.எல்.-ல் தனது 19 ஆவது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 121 ரன்களாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு 71 ரன்களில் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா (10 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பிறகு வந்த சாம் கர்ரன் 6 பந்தில் 18 ரன்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தார். ஆனாலும் ஆட்டம் கடைசி ஓவருக்கு நகர்ந்ததால் பரபரப்பு தொற்றியது.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 2 பந்தையும் பிளிஸ்சிஸ் பவுண்டரிக்கு விரட்டியடித்து இலக்கை எட்ட வைத்தார்.

சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 58 ரன்களுடனும் (44 பந்து, 6 பவுண்டரி), தோனி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். மும்பைக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்குப் பிறகு சென்னை அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

சென்னை அணி வெற்றி பெற்றாலும், 436 நாட்களுக்குப்பின் களம் கண்ட தோனியின் பேட்டிங்கை காணமுடியாததால் அவர் இரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

கொரோனா அச்சத்தால் இந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேலரிகள் வெறுமையாக காட்சி அளித்தது. இருப்பினும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பவுண்டரி, சிக்சர்கள் அடிக்கப்பட்ட போது மைதானத்தில் உள்ள மெகாதிரையில் ரசிகர்களின் கரவொலி ஆர்ப்பரிப்பும், நடன அழகிகளின் துள்ளல் நடனமும் அடங்கிய பழைய காணொலிக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

Leave a Response