எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ?

கர்நாடகாவில் 2010 ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் மாடுகளைக் கொல்வது, மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இச்சட்டத்துக்கு அப்போதே எதிர்ப்பு இருந்தது. ஆனால் அவற்றைச் செவிமடுக்காமல் சட்டம் கொண்டுவந்தார்.ஆனால் அதை நிறைவேற்றுமுன்பே எடியூரப்பா பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்.

அவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த எடியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.அது எடுபடாமல் போனதால் மீண்டும் பாஜகவில் இணைந்து இப்போது முதல்வராக இருக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பேசத் தொடங்கியுள்ளார்கள்.

கர்நாடக கால்நடைத் துறை அமைச்சர் பிரபுசவான், பசுக்களைப் பாதுகாக்கப் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. அந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். முதல்வர் எடியூரப்பாவுடன் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது விவாதித்து, பசுவதைதடுப்புச் சட்டம் கொண்டுவரப் படும் என்று கூறியுள்ளார்.

இதனால், ஏற்கெனவே 2010 இல் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததிலிருந்து பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவியையும் இழந்தார்.

இப்போது மீண்டும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் அதேபோல் நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்று கர்நாடக அரசியல்பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Response