சென்னையில் நாளைமுதல் மதுக்கடைகள் – இன்றே திறக்கவேண்டியது தள்ளிப்போனது ஏன்?

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 மதுக்கடைகளும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி இரவுடன் மூடப்பட்டன.

அதன்பின்னர், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படாமல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

43 நாட்களுக்குப் பிறகு மே மாதம் 7 ஆம் தேதி, சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தில் 4,550 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, மதுக்கடைகளை மே மாதம் 9 ஆம் தேதி முதல் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டது.

அதன்பின்னர்,உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், மே மாதம் 16 ஆம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 800 மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படாமலேயே இருந்தன.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை (செவ்வாய்கிழமை) முதல் திறக்கப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் 7-5-2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் 18-8-2020 (நாளை) முதல் இயங்கும்.

மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாகக் கடைபிடித்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முதலில், இன்றே மதுக்கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டதாம். ஆனால்,சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால், அந்தக் கடைகளில் இருந்த மது பாட்டில்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, அந்த மது பாட்டில்கள் எல்லாம் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது கடைகள் காலியாகவே உள்ளன.

எனவே, இந்தக் கடைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) மது வகைகள் புதிதாகக் கொண்டுவரப்பட இருக்கின்றன. மேலும்,மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் காரணங்களாலேயே இன்றே திறக்கப்படத் திட்டமிடப்பட்ட கடைகளை நாளை திறக்க முடிவு செய்யப்பட்டதாம்.

Leave a Response