கொரோனா பெயரைச் சொல்லி 2000 கோடி கொள்ளை – அதிர்ச்சித் தகவல்

கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விதான சவுதாவில் நேற்று அளித்த பேட்டியில்….

கர்நாடகாவில் மார்ச் 24 ஆம் தேதிக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்தியாவில் 10 பேர் இறந்த நிலையில் கொரோனா வைரஸ் 536 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் உலகளவில் 4.25 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அப்போதே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம். பிரதமர் நிவாரண நிதியில் ரூ.60 ஆயிரம் கோடியும், மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூ.290 கோடியும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசு இதுவரை மாநிலத்திற்கு எவ்வளவு நிதி அளித்துள்ளது? அதே நேரம் மாநில அரசு கொரோனாவுக்கு எவ்வளவு செலவிட்டது? என்கிற விபரத்தை மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

கர்நாடகாவில் கொரோனா சிகிச்சை, மருந்து, கிருமிநாசினி கொள்முதல் என இதுவரை ரூ.3,397 கோடி செலவிடப்பட்டுள்ளது. சந்தை விலையில் தரமான 500 மி.லி. கிருமி நாசினியின் விலை ரூ.100 தான். ஆனால், மாநில அரசு ரூ.600 விலையில் கொள்முதல் செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், கர்நாடகா அரசு இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது.

மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் மிகவும் குறைவாக, 10 லட்சம் பேரில் 9 ஆயிரம் பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை நடக்கிறது. டெல்லியில் 30 ஆயிரம் பேருக்கும், ஜம்மு-காஷ்மீரில் 28 ஆயிரம் பேருக்கும் தமிழ்நாட்டில் 16 ஆயிரம் பேருக்கும் பரிசோதனை நடக்கிறது. அப்படி இருக்கும்போது, நோயாளிகள் எண்ணிக்கையும், செலவும் கர்நாடகாவில் மட்டும் எப்படி அதிகமாக இருக்கிறது?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Response