கலைஞர்பிறந்தநாள் இன்று! அவரைக் கொண்டாடுவோம் நன்று!

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டிய சிறப்புப் பதிவு…..

கலைஞர் என்பது வெறும் நான்கெழுத்துச் சொல்லல்ல; கழக உடன்பிறப்புகளைப் பொருத்தவரை அது நான்கெழுத்து மந்திரம். தமிழ்நாடு மட்டுமல்ல, எந்த பிரச்சினை என்றாலும் கலைஞர் அது குறித்து என்ன சொல்கிறார் என்று எதிர்பார்க்க இந்தியத் திருநாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் கலைஞர்.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்ற சிற்றூரில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 1924 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் மூன்றாம் நாள் பிறந்தவர் கலைஞர். சாதாரண குடும்பத்தில் பிறந்த கலைஞர் அதிகம் படித்தவர் அல்லர். பெரும் சமூகப் பின்னணியில் தோன்றியவருமல்லர் ; பொருளாதார வசதி குறைந்த சாதாரண குடும்பம் அவருடைய குடும்பம். அதிகம் படிக்கவில்லை;சமூகப் பின்புலம் இல்லை;பொருளாதார நிலையிலும் பெரிய நிலைமையில்லை.

அப்படி இருந்தும் தன்னுடைய எழுத்தாலும் பேச்சாலும் கலைஞர் தமிழக வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய வரலாற்றிலும் பிரிக்க முடியாத ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக உருவெடுத்து இருந்தார்.

அதற்கு அவருடைய உழைப்பு ஒன்றே காரணமாக இருந்தது. இளமை முதற் கொண்டே தம் எழுத்தையும் பேச்சையும் மூலதனமாகக் கொண்டு, அரசியலிலும் திரைத்துறையிலும் முன்னேறி மேலும் மேலும் உயர்ந்தார்.

கலைஞரின் எழுத்து திறத்தையும் பேச்சு வன்மையையும் பாராட்டிக் கவிஞர் வாலி,
” தமிழ் மண்ணும் மொழியும்
மேன்மை பெற்றன
இவரது பேனாவால் ;
பேசும் நாவால் ! ”
என்று பாராட்டுவார்.

ஒரு மனிதர் ஒரு துறையில் தொடர்ந்து நிலைத்து நிற்பது என்பதே அரிது. அதிலும் பல துறைகளில் தடம் பதித்து இறுதிவரை புகழுடன்ஒருவர் விளங்கினார் என்றால் அது கலைஞர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

அரசியல் தலைவர்;ஓர் இயக்கத்தின் தலைவர்; தமிழக முதல்வர் ; திரைப்படக் கதை -உரையாடல் ஆசிரியர் ; பாடலாசிரியர் ; பத்திரிகையாளர் ;கவிஞர்; சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைகள்எழுதும் எழுத்தாளர் ; நாடக நடிகர் ; கேட்போரை காந்தக் குரலால் ஈர்க்கும் வலிமை மிக்க பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவராக அவர் விளங்கினார்.

கலைஞரின் எழுத்திலும் பேச்சிலும் இடம்பெற்ற தமிழ் சொல்லழகும், நடையழகும், துள்ளும் கதையோட்டமும், உவமை நலமும், கற்பனைத் திறனும், வியக்கவைக்கும் ஓசை நயமும், அலங்கார நடையும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரைக் கேட்கத் தூண்டும் அழகிய கரகர குரலும், உடன்பிறப்பே என்ற மந்திரச் சொற்களால் கழகத் தோழர்களைக் கட்டிப்போடும் பேரன்பும் கலைஞரைத் தவிர வேறு எவரிடமும் காண முடியாதது.

80 ஆண்டுகள் நீடித்த தன் அரசியல் நெடும் பயணத்தில் ஐந்து முறை முதலமைச்சர் பதவி வகித்தவர். 50 ஆண்டுகளாக கட்சித் தலைவராகத் திகழ்ந்தவர். 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டவர். (சட்டமன்ற தேர்தல்களில் ஒருமுறைகூட தோல்வி காணாதவர் என்ற பெருமை இவருக்கு உண்டு) இந்திய திருநாட்டில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இப்பெருமை கிடையாது.

பெரியாரின் கருத்தியல்களான சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம் ஆகியவற்றைத் தொடர்ந்து பின்பற்றியவர் கலைஞர். தன் வாழ்நாள் முழுவதும் சமூகநீதி, மாநில சுயாட்சி, பன்முக கலாச்சாரம், மதச்சார்பின்மை போன்ற உயர் கொள்கைகளை உயிர் கொள்கைகளாக கட்டிக்காத்தவர் கலைஞர்.
அவரது பன்முக திறன்களும், அரசியல் சாதுரியங்களும், நிர்வாகச் சாதனைகளும் என்றும் போற்றத் தக்கவை.

முறையாகப் படிக்கவில்லையே தவிர நிறைய படித்திருந்தார். அவர் படிக்காத இலக்கியங்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் நாள்தோறும் படித்துக்கொண்டே இருந்தார். தமக்கு நெருக்கமான கவிஞர்கள், அறிஞர்களோடு இலக்கிய உரையாடல் செய்து கொண்டே இருந்தார். தமிழின் மீது மிகுந்த பற்று அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.

கவிக்கோ அப்துல் ரகுமான்,
“தமிழிடம் அதன்
முகவரி கேட்டேன்
மேற்பார்வை மு கருணாநிதி
என்றது ”
என்பார்.

கலைஞர் அவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஈடுபாடும் பற்றும் இருந்ததை உணர முடிகிறது. அவரது தமிழ் உணர்வுக்குச் சான்றாக அவர் படைத்த, தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம், திருக்குறள் கலைஞர் உரை, சிலப்பதிகார நாடகம், சிலப்பதிகாரக் கதையை மையமாகக் கொண்டு எழுதப் பெற்ற பூம்புகார் திரைப்படக் கதை உரையாடல் பாடல்களும்,பல்வேறு பிற படைப்புகளும் சான்று பகர்வன.

கலைஞரால் சென்னையில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டமும், பூம்புகாரில் கலைஞரால் உருவாக்கப்பட்ட கண்ணகி கோட்டமும், கன்னியாகுமரியில் கலைஞர் அவர்களால் 2000ம் ஆண்டின் முதல் நாளில் திறந்து வைக்கப்பெற்ற 133 அடி உயரமுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையும் கலைஞரின் புகழை என்றும் பேசி நிற்கும்.

இந்திய நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் இருப்பதுபோல தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று எண்ணிய கலைஞர் மனோன்மணியம் சுந்தரனாரின் “நீராரும் கடலுடுத்த “என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவதற்கு வழி வகுத்தார்.

நம் மொழியாம் தமிழ்மொழிக்குச் செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தார்.

இந்திய மாநில முதல்வர்களுக்குச் சுதந்திரத் திருநாளில் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக மே தினத்தை உழைப்பாளர் தினமாக அறிவித்து அரசு விடுமுறை வழங்கினார்.

பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தந்தார்.

மகளிர் சுய உதவிக் குழு, விதவை மறுமணத் திட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தார்.

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை அவர்களே விற்க உழவர் சந்தை அமைத்தார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அனைத்து சமூக மக்களும் ஒன்றாக இணைந்து வாழ்ந்திட சமத்துவபுரங்கள் அமைத்தார். நெருக்கடி நிலையை எந்த மாநில முதல்வர்களும் எதிர்க்க முன்வராத போது துணிந்து எதிர்த்து, அதன் காரணமாக ஆட்சியை இழந்தார்.

சமூக நீதியைக் காக்க இறுதிவரை போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் கொண்டு வந்தார்.

உடல் ஊனமுற்றோர் என்பதை “மாற்றுத் திறனாளிகள் என்றும்,”அரவாணிகள் என்பதைத் “திருநங்கையர்” என்றும் அழைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்சா ஒழிப்பு. குடிசை மாற்று வாரியம் அமைத்தல், பேருந்துகளை அரசுடைமையாக்கல், குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தல் ஆகியவற்றைச் செய்தார். இந்தியாவிலேயே காவல்துறைக்கு முதன்முதலில் ஆணையம் அமைத்தார்.

இப்படி எத்தனை எத்தனையோ சாதனைகள் படைத்த கலைஞர் அவர்கள் தமது ஓய்வறியா உழைப்பால் — உன்னதமான படைப்புகளால் –செய்த செயற்கரிய சாதனைகளால் மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்;என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்!

அவரது பிறந்த நாள்(சூன் -3)இன்று !
அவரைக் கொண்டாடுவோம் நன்று!

– முனைவர் மு.செயலாபதி

Leave a Response