முன்னாள் மத்திய அமைச்சர்தலித் இரா.எழில்மலை மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள இரங்கற் குறிப்பில்….
தலித் மக்கள் முன்னணியின் நிறுவனரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான தலித் இரா.எழில்மலை அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய தபால் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு. இரா.எழில்மலை அவர்கள், ‘ தலித் மக்கள் முன்னணி’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். பின்னர் தீவிரமான அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான பாஜக அரசில் பாமக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2001-ம் ஆண்டு திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் முற்றிலும் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துக்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அயோத்திதாசப் பண்டிதரின் கருத்துக்கள் தமிழ் மண்ணில் பரவிட உதவியவர். இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட பிரச்சாரப் பணிகளிலும், தென்மாவட்டக் கலவரங்களையடுத்து வட மாவட்டங்களில் தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் தீவிரமாகப் பங்கேற்றவர். பொடா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தவர். பாமகவிலும், அதிமுகவிலும் சேர்ந்து செயல்பட்டாலும் எப்போதும் ஒரு அம்பேத்கரியவாதியாகவே செயல்பட்டவர்.
மத்திய அமைச்சரானபோதும் மாறாமல் அவர் அணிந்த அடர்நீலச் சட்டையும் எடுப்பான முறுக்குமீசையும் ஜெய்பீம் என்னும் கர்ஜனைக் குரலும் தான் அவருக்கு நிலையான அடையாளங்கள்.
எழுபத்தைந்தாவது அகவையில் இன்று காலமான அவருக்கு வீர வணக்கத்தைச் செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமதுஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
6.5.2020
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.