கடை திறப்பு நாளை விலை உயர்வு இன்று – தமிழக அரசு அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மே 4 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் மதுக் கடைகள் திறக்கப்படாது. இதுபற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதேபோன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக அரசு ஆயத்தீர்வை வரியை 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தி உள்ளது. இதனால் மதுபானங்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை உயர்வு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மீதும் விதிக்கப்படும். இதனால் சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை ரூ.10 வரை உயரும். நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை ரூ.20 உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கும் நிலையில் இந்த விலை உயர்வு அடித்தட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response