52 ஆண்டு காலமாக தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி – பழ.நெடுமாறன் கண்டனம்

காவிரிச் சிக்கலில் 52 ஆண்டு காலமாக தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

இந்திய அரசின் நீர்வளத் துறையின் கீழ் காவிரி நதி நீர் வாரியமும் மற்றும் கிருஷ்ணா, கோதாவரி வாரியங்கள் கொண்டுவரப் படுவதாக குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரியத்தின் நிர்வாகத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் குறிப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும்.

ஏனென்றால் நதி நீர் வாரியம் அமைக்கப்பட்ட உடன் அதற்கு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் அனைத்தும் உண்டு என இச்சட்டம் கூறுகிறது. மேலும் வாரியத்தின் நிர்வாக செலவினங்களை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாரியம் ஆண்டு தோறும் தனது வரவு செலவுத் திட்டக் கணக்கை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதைத் தவிர வாரியத்தின் நடவடிக்கைகளில் குறுக்கிடும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது. எனவே தான் இச்சட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் அனைத்து நதிகளையும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முன்னோட்டமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது என்ற ஆழமான ஐயம் ஏற்பட்டுள்ளது.

நதி நீர் வாரியச் சட்டம் அத்தியாயம் 3, பிரிவு 13-இன் கீழ் நீர் சேமிப்பு, கட்டுப்பாடு, நீர்ப் பங்கிடுதல் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் வாரியத்திற்கு உண்டு. நதி நீர் வாரியம் தன்னாட்சி அதிகாரம் படைத்த ஒரு அமைப்பென நதி நீர் தாவாச் சட்டம் கூறுகிறது. எனவே தான் அந்தச் சட்டத்தை நிர்வாக அமைப்பிலிருந்து மத்திய அரசு ஒதுக்கி, நீர்ப் பாசனத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நதி நீர் வாரியங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் விளைவாக இவற்றின் செயல்பாட்டில் மத்திய அரசின் குறுக்கீடு இருக்கவே செய்யும்.

கடந்த கால தமிழகத்தின் அனுபவம் இதற்குச் சான்றாகும். 1968-ஆம் ஆண்டில் காவிரிப் பிரச்னை உருவான போது பேச்சு வார்த்தை என்ற பெயரால் 22 ஆண்டு காலமாக, அதாவது 1990 வரை, கர்நாடகம் காலம் கடத்தி, அதற்குள் காவிரியின் துணை ஆறுகளில் அணைகளைக் கட்டி முடித்து விட்டது.

அதற்குப் பிறகு நடுவர் மன்றம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, அதற்குப் பின்னரே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக 17 ஆண்டுகள் தமிழகம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட மேலும் 6 ஆண்டுகள் தமிழகம் காத்திருக்க வேண்டியதிருந்தது.

அத்தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்க மறுத்த போது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி 2007-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதன் தீர்ப்பில் வாரியத்தில் 3 முழு நேர உறுப்பினர்களும் 6 பகுதி நேர உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் காலங்கடத்தப்பட்டு 2018-இல் அதிகாரம் இல்லாத வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. அதையும் மதிப்பதற்கு கர்நாடகம் பிடிவாதமாக மறுத்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி அமைக்கப்பட்ட வாரியத்தின் நடவடிக்கைகளை கர்நாடகம் புறக்கணித்த போது, இதில் தலையிட்டு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடகத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அமைதி காத்தது. காங்கிரசு அரசு இருந்த போதும் இப்போது பா.ஜ.க அரசு இருந்த போதும் அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது.

1968 தொடங்கி இன்று வரை 52 ஆண்டு காலமாக தொடரும் அநீதியாக இப்போது காவிரி நதி நீர் வாரியம் மத்திய நீர்ப் பாசனத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பெரும் அநீதி திட்டமிட்டு இழைக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்திய அரசின் இந்த நிர்வாக ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடரும்படி தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response