
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசியச் சேவைகள் தவிர பேருந்து, தொடர்வண்டி உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருப்பதால், பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இதேபோல் பிற மாநிலங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், சுற்றுலா சென்றவர்களும் சொந்த ஊர்களுக்குச் திரும்ப முடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட ஊர்களில் கட்டிடப் பணி உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளை மீறி சொந்த மாநிலத்துக்குச் செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
வெளிமாநிலத் தொழிலாளர்களை நீண்ட நாட்கள் தங்க வைக்காமல் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சி கோரிக்கை விடுத்தது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வெளிமாநிலத் தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்துப் பராமரிப்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பதோடு, நிதிச்சுமையும் ஏற்படுகிறது.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.
அத்துடன், வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைத் திரும்ப அழைத்து வந்து தனிமைப்படுத்தி வைத்து பராமரிப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கு பிரச்சினை உள்ளது.
இதனால் இந்த விவகாரத்தை எப்படிக் கையாளுவது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது….
ஊரடங்கின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கிறார்கள். தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும்.
இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டு அறியவேண்டும்.
அவர்களில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டும் பேருந்துகளில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பேருந்துகளில் தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அந்த பேருந்துகள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தைச் சென்று அடைந்ததும், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களைப் பரிசோதித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


