அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை கொரோனா பரிசோதனை

இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவின் உச்சக்கட்ட தாக்குதல் தொடங்கி இருக்கிறது. முதல் முறையாக ஏப்ரல் 1-ம் தேதி ஒரே நாளில் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் அதிகபட்சம் 2 இலட்சம் பேர் வரை பலியாவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்த நிலையில், அது தற்போது உச்சக்கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளது.

பலி எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,320-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்தியாவசிய மருத்துவ உபகரணமான வென்டிலேட்டர் போதிய அளவுக்கு இல்லாமல் நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர். அடுத்த 2 வாரங்கள் இன்னும் மிக மிக வலி மிகுந்ததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்கா முழுவதும் 80 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதற்கிடையே, சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் பிட்டனைச் சந்தித்துப் பேசினார். அமைச்சர் பீட்டர் ஆஸ்திரேலியா திரும்பியதும் அவருக்குக் கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது. இதன் காரணமாக அமைச்சர் பிட்டனுடனான சந்திப்பில் பங்கேற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதிவெள்ளை மாளிகையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் டிரம்புக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியிருக்குமோ? என்ற அச்சத்தில் அதிபர் டிரம்ப் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Response