காங்கிரசுக் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், தலைநகர் டெல்லியில் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு காங்கிரசு தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் திட்டமிடாத வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசை சோனியா சாடினார்.
அவர் பேசியபோது……
முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டில் சுகாதாரம் மற்றும் மனிதநேய நெருக்கடி சூழ்ந்துள்ள நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். நமக்கு முன்னால் இருக்கும் சவால் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் அதைக் கடப்பதற்கான உறுதி நம்மிடம் அதிகமாக இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மனித குலத்தை ஒன்றிணைக்கும் சகோதரத்துவப் பிணைப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது. நமது நாட்டில் இந்த கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது ஏழைகளும், பின்தங்கியவர்களும்தான். அவர்களின் நலன்களுக்காக நாம் ஒன்றிணைந்து, முடிந்த அவ்வளவையும் செய்ய வேண்டும்.
21 நாள் ஊரடங்கு என்பது தேவையானதுதான். ஆனால் திட்டமிடப்படாமல் அறிவித்தது, இந்தியாவில் உள்ள இலட்சோப இலட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வில் குழப்பத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இலட்சக்கணக்கான மக்கள் உணவும், தங்குமிடமும் இன்றி பல நூறு கி.மீ. தொலைவில் உள்ள சொந்தக் கிராமங்களுக்கு நடந்து சென்றதைப் பார்த்தபோது மனம் உடைந்து போய் விட்டது. அவர்களது துன்பம் குறைவதற்கு நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்ய வேண்டியது நமது கடமை. அவர்கள் மீது இரக்கமும், கருணையும் கொண்டு உதவிசெய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா வைரசை பொறுத்தமட்டில் நிலையான, நம்பகமான சோதனை முறை இல்லை. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது ஆதரவு தேவைப்படுகிறது. பாதுகாப்புக் கவச உடைகள், என்-95 முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
அதற்குச் சமமாக கொரோனா பாதிப்புக்கு ஆளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனை, படுக்கை, செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் தேவை. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கொரோனா வைரஸ் பரவாமலும், இறப்புகள் நிகழாமலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனைகள், அவற்றில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தும் வசதிகள், பரிசோதனை வசதிகள், பொதுமக்களுக்கு மருத்துவப் பொருட்கள் விநியோகித்தல் உள்ளிட்டவை போன்ற விவரங்களை அரசு வெளியிட்டு, கிடைக்கச்செய்ய வேண்டும்.
பருவ நிலையால் கஷ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் இப்போது அறுவடைக் காலத்திலும், நாடு முழுவதும் ஊரடங்கு போட்டுள்ள நிலையில் போராட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அவர்களுக்கு இலாபம் தரக் கூடிய விலை வேண்டும். அப்போதுதான் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் தப்பிக்க முடியும்.
நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகளால் அவை மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க அரசிடம் விரிவான ஒரு திட்டம் தேவை.
முறைசாரா தொழிலாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அவர்களின் வாழ்வாதாரத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் ஏற்கனவே பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
நடுத்தர வர்க்கத்தினரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஊதிய குறைப்பு, வேலை இழப்புகள், விலைவாசி உயர்வு அவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. மாதாந்திர தவணை ஒத்திவைக்கப்பட்டாலும்கூட, வட்டி மானியம் வழங்கப்படவில்லை.
எனவே பொதுவான குறைந்தபட்ச நிவாரணத் திட்டத்தைத் தயாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது இன்றியமையாதது. அனைத்துத் தரப்பு மக்களின் கவலைகளைக் குறைக்க உதவக்கூடியதும் ஆகும்.
இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.
சோனியாகந்தியின் இந்தப் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முயற்சிகள் உள்நாட்டிலும், உலக அளவிலும் பாராட்டப்படுகின்றன.
கொரோனா வைரசை வீழ்த்துவதில் நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். ஆனாலும் கூட, காங்கிரசுக் கட்சி அற்ப அரசியல் விளையாட்டு நடத்துகிறது. நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்துவதை அந்தக் கட்சி நிறுத்த வேண்டிய அவசரமான தருணம் இது.
இவ்வாறு அமித் ஷா கூறி உள்ளார்.
சோனியா காந்தியின் உரைக்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவும் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. பிரதமர், அனைத்து மாநிலங்களுடன் சேர்ந்து ஒரே அணியாகப் போராடுகிறார். கடினமான காலங்களில் காங்கிரசுக் கட்சி ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாகச் செயல்பட வேண்டும்.
ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அத்தகைய ஒரு நேரத்தில் சோனியா காந்தி வெளியிட்டுள்ள கருத்து உணர்வற்றது, அநாகரீகமானது. இது அரசியல் செய்வதற்கான நேரமும் அல்ல. தேசத்துக்காக ஒன்றுபட்டு செயல்படவேண்டிய தருணம் இது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.