ரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி?

தி ரியல் அட்வென்ச்சர் – திருமிகு கனிமொழி எம்.பி!

இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பிரம்மிக்கத்தக்க விஷயம்.சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமானம் கிடையாது. சாலை வழிப்பயணம் என்பது மிகக்கடினம். ஏனனில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு விட்டது. பகலில் என்பதே மிகச்சிரமம். அதிலும் இரவில் தனி ஒரு பெண்மணியாக காரில் தன் உதவியாளர்கள் கூட இல்லாமல், கார் முழுவதும் என்.95 மாஸ்குகள் போன்ற கொரோனா தடுப்பு கவசங்களை எடுத்துக் கொண்டு ஒட்டுனரை காரை செலுத்த சொல்லி காரின் பின் பக்கம் தான் மட்டும் அமர்ந்து கொண்டு தக்க முகக்கவசம் எல்லாம் அணிந்து கொண்டு காலை தூத்துக்குடி நகரின் உள்ளே நுழைந்த போது காலை மணி 8.30.
தன் வீட்டை விட்டு சென்னையில் கிளம்பிய போது இரவு 11 மணி. 607 கிமீ தூரம் சுமார் 10 மணி நேரம் பயணம். செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர் மதுரை, மதுரை ஏர்போர்ட் ரோடு கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி நாலாவது ரயில்வே கேட் பகுதியில் ஐயப்பன் நகரின் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் முதலில் அதிர்ந்தது அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.

மாவட்ட எல்லைகள் எல்லாம் மூடிய பின்னர் சாலையில் போலிசாரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். சில இடங்களில் சாலைகளில் போலீசாரும் கூட இருக்க மாட்டார்கள். அது போன்ற இடங்களில் சாதாரண நாட்களில் வழிப்பறிகள் கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் இது அசாதாரண சூழல். ஊர் முழுக்க ஊரடங்கு நடக்கும் நேரம். அப்படியும் தனி ஒரு பெண், கலைஞர் கொடுத்த தைரியத்தை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு தன்னை தேர்வு செய்த தூத்துக்குடி மக்களுக்கு உழைக்க இரவில் இப்படி போவதற்கு எத்தனை ஒரு மனத்துணிவும், கருணை மனோபாவமும் தேவைப்படும். சத்தியமாக இது புகழ்வதற்காக இடப்படும் பதிவல்ல. இதில் இருக்கும் சிரமங்கள் தான் உண்மையில் ப்ரம்மிக்கத்தக்கது.

அதிர்வான பணிப்பெண் அவர்களிடம் சமாதானம் சொல்லி மீண்டும் அங்கிருந்து உடனே கிளம்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பின்னர் தூத்துக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை என தன் பயணத்தை தொடர்ந்து இதோ பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நேரம் வரை தொகுதி மக்களை சந்தித்து கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தி தான் கொண்டு வந்த என்.95 மாஸ்குகளை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கி, மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களிடம் தன் தொகுதி நிதி 1 கோடியை துரிதமாக கொரோனா கிட் வாங்கவும், வெண்டிலேட்டர்கள் வாங்கவும், மருத்துவர் முழு உடல் கவசம் மற்றும் என்.95 முகக்கவசம் வாங்கவும் வலியுறுத்தி விட்டு….ஏற்கனவே 1 கோடி நிதி ஒதுக்கியதற்கு மேலாக இன்று மேலும் கொரோனோ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க மேலும் 50 லட்சம் ஒதுக்கி கடிதம் கொடுத்தார். இத்தனைக்கும் இரவு காரில் தூங்கிக்கொண்டு கூட வந்திருக்க இயலாது. ஒவ்வொறு சோதனைச்சாவடியிலும் காரை நிறுத்தும் போது கண்ணாடியை இறக்கி தான் தான் தூத்துக்குடி எம்.பி என தன் முகத்தை காட்டி “தொகுதிக்கு செல்வதை” சொல்லி பயணம் தாமதம் ஆகாமல் ஒரு நிமிடம் கூட தூங்காமல் இந்த பகல் 1 மணி இப்போது…. தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றார்.

தலைவர் கலைஞர் அவர்களை ஞாபகப்படுத்துகின்றார். 2011 ல் ஆட்சியை இழந்து விட்டார் தலைவர் கலைஞர். இழந்த 3 மாதத்தில் தானே புயல் தமிழகத்தை குறிப்பாக கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் என கோரத்தாண்டவம் ஆடுகின்றது. முதல்வர் ஜெயா அவர்களோ மக்களை நேரில் வந்து சந்திக்க பயந்து கொண்டு வீட்டில் இருக்கின்றார். ஆனால் தலைவர் கலைஞர் தன் காரில் சாலை மார்க்கமாக பாதிக்கப்பட்ட மரக்காணம், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் என வருகின்றார். காரில் தலைவர் கலைஞர் அவர்களுடன் அவரது மகள் திருமிகு கனிமொழி அவர்களும் தான் வருகின்றார். தன் தந்தைக்கு அந்த அந்த ஊர் எல்லையில் மக்கள் தரும் சால்வைகளை வாங்கி பக்கத்தில் அமர்கின்றார். எப்போதும் தலைவரிடம் “அடுத்து எப்ப தலைவா வருவ?” என கேட்கும் மக்கள் அந்த முறை “ஏன் தலைவா இப்ப வந்த? சாலை எதுவும் சரியில்லை. புயல்ல நாங்க சமாளிச்சுப்போம். நீ ஏன் தலைவா இந்த 89 வயசுல வர்ர?” என கேட்டார்கள். ஆனால் தலைவர் பிடிவாதமாக சாலை மார்க்கமாக மக்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தார். ரயிலில் கூட சொகுசாக வந்திருக்கலாம். ஆனால் தானே புயலில் பாதிக்கப்பட்ட தன் மக்களை பார்க்க அந்த வயதில் காரில் வந்தார்.

அது தான் தலைவர். இது தான் திருமிகு கனிமொழி அவர்கள். நம் தலைவர் தளபதியார் போல, தம் தந்தை தலைவர் கலைஞர் போல முதலில் தம் மக்கள் பணி. பின்னர் தான் மற்றதெல்லாம் என்னும் மனோபாவம் இவர்களது குடும்ப சொத்து.

திருமிகு கனிமொழியின் இந்த பயணம் கூட விமர்சிக்கப்படலாம். அப்போது தானே புயல் சமயத்தில் தலைவர் கலைஞர் சாலை மார்க்கமாக சென்ற போது வந்த அதே விமர்சனங்கள் இப்போதும் வரலாம். ஆனால் தன் தொகுதி மக்களை பார்க்க அதன் பிரதிநிதி வருவதை எந்த சட்டமும், எந்த ஊரடங்கும் தடுக்க இயலாது. போதிய மருத்துவ பாதுகாப்புடன் அவர் வந்து தன் தொகுதியில் பணியாற்றுவது தவறில்லை. ஒரு மருத்துவர் தன் வீட்டில் இருந்து நோயாளிகளை பார்க்க போவதை எப்படி தடுக்க இயலாதோ அதே போல் தான் தன் தொகுதி மக்கள் நலவாழ்வுக்காக திருமிகு கனிமொழி அவர்கள் செல்வதை யாரும் விமர்சிக்க இயலாது.

பெங்களூர் காட்டில் முழுப்பாதுகாப்புடன் சூப்பர் ஸ்டார்கள் சூட்டிங் எடுப்பது அட்வன்ச்சர் இல்லை. நேற்று இரவு சென்னை – தூத்துக்குடி சாலையில் தனி ஒரு பெண் பயணித்து தன் தொகுதி மக்களை போய் பார்த்தது தான் ரியல் அட்வன்ச்சர்!

மனதார பாராட்டுகின்றேன்!

வாழ்க தலைவர் தளபதியார்! வாழ்க கழக வீரப்பெண் கனிமொழி! வெல்க திமுக!

– அபி அப்பா என்கிற தொல்காப்பியன்

Leave a Response